enakenap peiyum mazhai

ஹாய் நட்பூஸ்....

லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் எழுதி வந்த எனது,  'எனக்கெனப் பெய்யும் மழையை' இங்கே தொடரலாம் என உள்ளேன். 

விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம். 

எனக்கெனப் பெய்யும் மழை.
மழை – 1

கணம் தாங்கா காராம் பசுவின் மடி போல கார்மேகம், மென்மையாய் தூறிக் கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அரும்புவிட துவங்கியிருந்த ராமர் பானமும், நன்றாய் முதிர்ந்து இரண்டடுக்கில் இதழ் விரித்திருந்த அடுக்கு மல்லியும், இதமான தூரலில் தலை குளித்துக் கொண்டிருந்தன.

கிணற்றடியில் கவிழ்த்துப் போடப்பட்டிருந்த, இரும்பு வாளியில் நீர் துளிகள் தாளம் இசைக்க, முதிர்ந்த மரங்களின் கிளைகளில் இருந்த இலைகளெல்லாம் அந்த இசைக்கு ஏற்ப தென்றலோடு கைகோர்த்து நடனமாடிக்  கொண்டிருந்தன.

காற்றில் மலர்களின் மணத்தோடு, மனம் மயக்கும் மண்வாசமும் கலந்து ஒரு வகை சுகந்த நறுமணமாய் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தது.

தன் பெரிய வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்த துணி துவைக்கும் கல்லில் முழங்கால்களை இருகரத்தால் சிறை செய்து, அழுத்தமாய் அமர்ந்திருந்தாள் பூங்கொடி.

சுற்றுபுறத்தில் இருந்த குளுமைக்கு மாறாக, அவள் இதயத்தில் வெம்மை செம்மையாய் படர்ந்திருந்தது. இனி வெளியேற முடியாதபடி அனைத்து பாதைகளும் ஒரே புள்ளியில் அடைபட்டு விட்டதை எண்ணி அவள் மனது பெருந்துயர் கொண்டது.

“கொடி.. மழை வலுக்குது.. உள்ள வா..’’ உள் கூட்டத்தில் இருந்து குரல் கொடுத்த மூத்த அண்ணி காஞ்சனையின் குரலுக்கு, பதில் சொல்லப் பிடிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள் பூங்கொடி.

 இரண்டு நிமிட இடைவெளியில், மூத்த அண்ணன் மருது அவள் அருகில் வந்து நின்றான். அவன் உடல் மொழியில் அப்படி ஒரு இறுக்கம். அவள் அருகில் வந்து நின்றவன், கைகளைக் கட்டிக் கொண்டு, ‘நீ உள்ளே வரமால்.. நான் இங்கிருந்து நகரப் போவதில்லை’ என்ற தொனியில் இறுக்கமாய் நின்றான்.

சாரியாய் ஐந்து நாட்களுக்கு முன்பு வரை, “தங்கப்பிள்ள..’’ என்று வாய் நிறைய கூப்பிட்டு, கை நீட்டியதை எல்லாம் வாங்கித் தந்த அன்பு அண்ணன் தான். 

வெளியே முரடன் என்று எத்தனைப் பெயர் எடுத்து இருந்த போதும், மருது தங்கையின் பெயரை அழுத்தி கூட உச்சரித்ததில்லை. மூன்று ஆண்களுக்கு பிறகு வீட்டை நிறைக்க வந்த பெண் வாரிசு என்று அவள் இல்லமே அவளை தேவதையாய் தான் கொண்டாடி தீர்த்தது. அதுவும் மூத்த அண்ணனுக்கும் அவளுக்கு சரியாய் பதிமூன்று வருட இடைவெளி.

அந்த வீட்டில் மகளை அடக்கி வைக்கும் ஒரே ஆள், பூங்கொடியின் தாய் இந்திராணி மட்டும் தான். அவரும் ஐந்து வருடங்களுக்கு முன்பு, அரவம் தீண்டி இறந்துவிட, அதன் பின் பூங்கொடிக்கு தாயில்லாப் பெண் என்ற பரிதாபமும் சேர்ந்துக் கொண்டது. அன்றிலிருந்து, ‘அடியே’ என்ற வார்த்தை கூட அவள் அகராதியிலிருந்து மொத்தமாய் ஒழிந்திருந்தது.

வயதுக்கு வந்த பெண்ணுக்கு, வீட்டில் ஒரு பெண் துணை தேவை என்றே அத்தனை நாள் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்த மருது கூட, தாய் இறந்த மூன்றாம் மாதமே காஞ்சனையை தன் வாழ்க்கைத் துணையாய் ஏற்றுக் கொண்டான்.

எப்பொழுதும் பட்டாம் பூச்சியாய் வளைய வந்த பூங்கொடியை காஞ்சனைக்கும் பிடித்து விட,  அவளின் அப்பாவை விட, அண்ணன்கள் பெரும் நிம்மதி கொண்டனர்.

இரண்டாம் அண்ணன் தங்கபாண்டி வெளிப்படையாய் தன் பாசத்தை காட்ட மாட்டான் எனினும், சிறு சிறு செய்கைகள் மூலம் தனதன்பை உணர்த்தி செல்வான்.

அவன் மனைவி வைசாலியோ, காஞ்சனையை போல அண்ணி என்ற உறவில் நிற்காமல், பூங்கொடியின் தோழியாகிப் போனாள்.

மூன்றாம் அண்ணன் செந்தூர பாண்டியன் பணியின் நிமித்தம் சென்னையில் இருந்தாலும், ஊருக்கு வரும்போது எல்லாம் அவன் பயணப் பொதி சுமந்து வரும் தங்கைக்கான பரிசுப் பொருளை.

அண்ணன்களில் அவளை தொட்டு, அடித்து விளையாடும் ஒரே அண்ணன் அவனே. “ஏய் மூஞ்சுறு’’ என்று அவளை காலாய்த்து தள்ளுபவன் என்றாலும், அவளின் எதிர்காலம் மீது நிரம்ப அக்கறை கொண்டவன்.

பனிரெண்டாம் வகுப்பில் அவள் கணிதத்தில் தந்தியடிக்க, மூன்று மாதம் பணிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு, உடன் இருந்து அவளை பொது தேர்வில் தேர்ச்சியுற வைத்தவன்.

பம்பட்டி அணிந்த பாட்டிமார்கள் தங்கையின் திருமணம் குறித்து பேசினாலே, “ஏய் கிழவிகளா... சும்மா இருக்க மாட்டீங்க. என் தங்கச்சிய துரத்தி விடுறதுல அம்புட்டு அவசரம். ஓவரா எங்க அப்பாவுக்கு வேப்பில்லை அடிச்சிட்டு கிடந்தீங்க... உங்க அம்புட்டு பேரையும் ஒரு குழந்த பிள்ளைக்கு கல்யாணம்  செய்ய ப்ளான் போடுறீங்கன்னு போலீஸ்ல பிடிச்சி கொடுத்துடுவேன் ஆமா.’’ என்று கிண்டல் மொழியில் அவர்கள் வாய் அடைப்பான்.  

“ஆமா உன் தங்கச்சி சின்ன பாப்பா. தையில கட்டி கொடுத்தா ஐப்பசியில கையில பிள்ளையோட நிப்பா... அவ சின்ன பிள்ளையா. ஹும் எங்க பேச்சு எல்லாம் இந்த இளந்தாரிப் பயலுவ காதுல எங்க ஏறுது. மல்லி வெடிச்சா தொடுத்துபுடணும். பிள்ளை மலர்ந்தா மாத்து மாலை தேடனும். இதெல்லாம் உங்களுக்கு இப்ப புரியாது.’’ என்று நொடித்து விட்டு சென்றாலும், அவர்களைப் போலவே பேசிக்காட்டி தன் தங்கையை வெறுப்பேற்றி அலைவான்.

அப்படிபட்டவன் இன்று தங்கையின் அவசர திருமணத்திற்காய் சென்னையில் இருந்து கிளம்பி வந்து கொண்டு இருக்கிறான் வெம்பிய மனதோடு.

மழை சற்றே வலுக்க தொடங்கவும், தான் நகராமல் அண்ணன் இங்கிருந்து ஒரு அடி வைக்க மாட்டான் என்பதை உணர்ந்தவள், ஓரப் பார்வையில் மூத்த அண்ணி, தன் நிறைமாத வயிற்றை தள்ளிக் கொண்டு குடையுடன் வருவது கண்ணில் பட படக்கென எழுந்து நின்றாள்.

“ச்சே... இன்னும் நாலு நாள் தான என்ன இங்க வச்சி இருக்கப் போறீங்க..? அதுவரைக்குமாவது என்ன நிம்மதியா இருக்க விடுங்களேன்.’’ என்றவள் விடுவிடுவென வீட்டிற்குள் நுழைய, அதற்கெனவே காத்திருந்தார் போல, வைசாலி அவளை பின் தொடர்ந்தாள்.

வீட்டின் நடு கூட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து நடப்பது அத்தனையும் மௌனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பூங்கொடியின் தந்தை, கந்தவேலன்.

நடக்கும் நிகழ்வுகள் அவருக்கு மட்டும் விருப்பமானவையாகவா இருக்கிறது. ஆயினும் இது அத்தனைக்கும் மூல காரணம் தன் மகளின் செயலே மட்டுமே அல்லவா, என்று தோன்றிய மறுநொடி அவர் உள்ளம் மொத்தமும் இறுக்கம் கொண்டது.

“லேய் மருது.... சமயல் காண்ட்ராக்ட் பேச முத்து ஆள் கூட்டியாரேன்னு சொன்னான். கழுத இன்னும் ஆளைக் காணோம். நீயே சந்தை வலசு போயி என்ன ஆச்சுனு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடு. தங்கம் வந்தான்னா அடிக்க கொடுத்த பத்திரிகையை ருசு பாத்து வாங்கியார சொல்லு.’’ என்றவர் தன் வெற்றிலைப் பெட்டியோடு வெளியே கிளம்ப, காஞ்சனை சற்றே தயக்கத்தோடு அவர் முன் வந்து நின்றாள்.

“மாமா.... எதுக்கும் கொஞ்சம் பொறுமையா..’’ அவள் வார்த்தைகளை முடிக்க கூட இல்லை, அதற்குள் ஆத்திரமாய் குறுக்கிட்டவர், “ஆத்தா கல்யாணம் நடந்தா இது விசேச வீடா இருக்கும். இல்ல என் பொணம் விழுந்த எழவு வீடா தான் இருக்கும். ஒத்த சொல்லுல நிக்குற ஆளுக நாம. மாத்தி பேச முடியாது தாயி.’’ என்றுவிட்டு கொட்டும் மழையிலும் விறு விறுவென்று வெளியேறி செல்ல, காஞ்சனை வலியோடு கணவனை பார்த்தாள்.
அவனும், ‘இதற்கு மேல் இதில் தான் செய்வதற்கு ஏதும் இல்லை’ என்பது போல ஒரு முகபாவனையை வெளிப்படுத்திவிட்டு, மௌனமாய் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

பூங்கொடியின் அறையில் இருந்து வெளிப்பட்ட மெல்லிய விசும்பல் ஏனோ காஞ்சனையின் மனதை அத்தனை ரணமாக்கியது.

அதே நேரம் பெங்களூரில் நீச்சம் குளம் ஒன்றின் அருகில் அமர்ந்திருந்தவன், தன் கையில் இருந்த மதுக் குப்பியை வேகமாய் நீருக்குள் விசிறி அடித்தான்.

“மாம்... எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்.’’ நேற்றிலிருந்து ஒன்பதாயிரத்து எழுபத்து மூன்று முறை தன் தாயிடம் படித்த அதே வார்த்தைகளை மீண்டும் மனதிற்குள் வன்மையாய் அலறிக் கொண்டான்.

ஆனால் இம்முறை அவன் மறுப்பிற்கு கொஞ்சமும் மதிப்பிருக்க போவதில்லை என்பதை அவன் மனம் உணர்ந்தே இருந்தது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பின்பு மன அமைதி இழந்து மீண்டும் மதுவின் துணையை நாடி இருக்கிறான்.

ஆனாலும் மனம் சாந்தியடைய கொஞ்சமும் விரும்பவில்லை. அதே வலிகள் மீண்டும் கீறல் கொண்ட காயமாய் வன்மையாய் வெளிவர, தன் நிலை வெறுத்தவன், வேகமாய் அங்கிருந்து எழுந்தான்.

அப்படி அவன் தன் நிலை மறந்து வேகமாய் எழ, வலப்பக்கம் முழங்காலிற்கு கீழ் பொருத்தப்பட்டிருந்த செயற்கை கால் தன் இருப்பை அவனுக்கு வன்மையாய் உணர்த்தியது.

“ஷ்..’’ வலியில் வேகமாய் முனகியவன், சற்றே தள்ளாடி பின் சமாளித்து நின்றான். ஆனால் அதற்குள் சற்றே தொலைவில் இருந்து அவனையே கவனித்துக் கொண்டிருந்த அவனின் வாகன ஒட்டி வேகமாய் அவனை நெருங்கி இருந்தார்.

“சார்.. பாத்து சார்’’ அவர் அவனுக்கு உதவ வர, “ஹே... டோன்ட் டச் மீ..’’ என்று அவரிடம் எகிறியவன், தன் வாகனத்தை நோக்கி நடந்தான்.

உள்ளுக்குள் ஒரு குரல் எக்காளமாய் சிரித்தது.

“நொண்டியை எல்லாம் யாரு கட்டிப்பா. அதுவும் ஒரு செகன்ட் ஹான்ட்.’’

‘இன்னும் நான்கு நாட்களில் தன் வாழ்வில் நுழையப் போபவளின் எண்ணமும் அதுவாய் தான் இருக்குமோ..?’

தலையை உலுக்கி தன் எண்ணங்கள் செல்லும் திசையை மாற்றினான். ‘எவ வந்தா எனக்கென்ன..? இது என்னோட வாழ்க்கை.. நான் என்னோட விருப்படி தான் இருப்பேன்.’ என்று மனதிற்குள் முடிவெடுத்தவன், அந்த முடிவு தந்த திடத்துடன் அழுத்தமான அடிகள் வைத்து தன் வாகனம் நோக்கி முன்னேறினான்.

ஆனால் அவன் அப்போது அறியவில்லை. தினம் தினம் ஹெக்டரில் கணக்கிட முடியாத பூகம்பம் ஒன்று தன் வாழ்வில் நுழையப் போகிறது என்பதை.       

மழை பொழியும்.

Comments

  1. ஓ...சூப்பர் மேஹிமா. நல்லதொரு ஆரம்பம். அடுத்த பதிவை தேடி ஊட வைக்கிறது. வாழ்த்துக்கள் டியர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Mazhai - 15 (Final ud)

mazhai - 12