மழை – 6
அலுவலகத்தில் இருந்து கிளப்பும் நேரம் மகிழனின் அலைபேசி குறுஞ்செய்தி
வந்ததிற்கான ‘பீப்’ ஓசையை வெளிப்படுத்த, “போச்சுடா.. எதை வாங்கிட்டு வர சொல்லி
மெசேஜ் அனுப்பி இருக்களோ தெரியலையே..’’ என்று மனதிற்குள் புலம்பியபடியே, மகிழன்
தன் அலைபேசியை கையில் எடுத்தான்.
அவன் எண்ணியபடியே செய்தி பூங்கொடியிடமிருந்து தான் வந்திருந்தது. ஆனால் அவள்
வழமையாய் வாங்கி வர சொல்லும் தின்பண்ட வகையறாவாய் அல்லாது, அவள் வாங்கி வர
சொல்லியிருந்த பொருள், நிமிடத்தில் அவன் முகத்தை அஷ்ட கோணலாக்கியது.
‘என்னது இது.. இதையெல்லாம் என்னை வாங்கிட்டு வர சொல்றா.... மூளையை கடன்
கொடுத்துட்டு சுத்துறா போல. இதைப் போய் நான் எப்படி கடையில கேட்டு வாங்குவேன்.
அவளை...’’ மனதிற்குள் அவளை நினைந்து பொங்கியவன், வீட்டிற்கு கிளம்ப துவங்கினான்.
அவள் கேட்டதை வாங்காது வீடு செல்லவே அவன் விரும்பினான். ஆனாலும் ஒரு
மருந்தகத்தை தாண்டும் போது அவனுடைய வாகனம் தன்னைப் போல நின்றது.
கையில் அலைபேசியை எடுத்துக் கொண்டவன், அதில் இருந்த குறுஞ்செய்தியை விற்பனைப்
பெண்ணிடம் காட்டி, “இது வேண்டும்..’’ என்று கேட்க, அந்தப் பெண்ணோ அதில்
குறிப்பிட்டு இருந்த அணையாடையை கருப்பு நிற நெகிழியில் வைத்துக் கொடுத்தாள்.
மகிழனுக்கு அந்த நெகிழிப் பையை கையில் தொடவே மனம் ஒப்பவில்லை. ஆயினும் பட்டும்
படாமல் அதை இடக்கரத்தில் வாங்கியவன், அதற்கான தொகையை செலுத்தியதும், வேகமாய் தன்
வாகனத்தில் ஏறி, கையில் இருந்த பையை வாகனத்தின் பின்பக்க இருக்கையில் வீசி
எறிந்தான்.
வீட்டை அடைந்ததும், அவன் அழைப்பு மணியை அலறவிட, பூங்கொடி தான் வந்து கதவை
திறந்தாள். முகம் மிகவும் சோர்ந்து இருக்க,
“எங்க மாமா.. நான் கேட்டது. வாங்கிட்டு வந்தீங்களா..?’’ என கேட்க, வீட்டின்
வரவேற்பறை சோபாவில் அமர்ந்து தன் காலுறைகளை நீக்கிக் கொண்டிருந்தவன்,
“எதை எதை எல்லாம் என்னை வாங்கிட்டு வர சொல்லுவ பூங்கொடி. மெடிக்கல் ஷாப்ல போய்
அதை கேட்டு வாங்கவே எனக்கு அன் ஈசியா இருந்துச்சி தெரியுமா..? இனி ஒருவாட்டி என்னை
அதயெல்லாம் வாங்கிட்டு வர சொல்லாத. கீழ கார்ல பேக் சீட்ல இருக்கு. போய்
எடுத்துக்கோ.’’ என்றவன் தன் போக்கில் உள் அறையை நோக்கி நடக்க, பூங்கொடி அப்படியே
உறைந்து போய் நின்றாள்.
அவளால் எட்டு வைத்து நடக்க முடியாத அளவிற்கு உடல் உபாதை அவளை படுத்திக்
கொண்டிருந்தது. ஏனோ அந்த நொடி அவள் உள்ளம் மருதின் மடி சாய ஏங்கியது.
இது போன்ற மாதந்திர நாட்களை, மருது அவளின் முகம் கண்டே கண்டுபிடித்துவிடுவான்.
அன்றைய தினங்களில் அவளுக்கு உளுத்தங்களி உணவில் இருவேளையும் சேர்க்கப்படும்.
முற்றத்தில் அவள் சோர்ந்து அமர்ந்திருந்தாள், அவள் அருகில் அமர்ந்து, அவளை தன்
மடி சாய்த்துக் கொள்ளுவான்.
அவனின் தாய் வழிப் பாட்டி, “இந்த மாதிரி நேரத்துல அவளை தொடக் கூடாதுடா
மருது..’’ என்று எத்தனை அதட்டினாலும் கேட்கமாட்டான்.
“அட... நீப் போ கிழவி, உன் பொழப்பை பாத்துக்கிட்டு. அப்படி பாத்தா நீ
குடிக்கிற தண்ணியில இருந்து, கும்புடுற சாமி, நிக்கிற பூமி அம்புட்டும் பொம்பளை
தான். ஏன் மாசத்துல மூணு நாள் தீட்டுப் பார்த்து இதையெல்லாம் ஒதுக்கி வைக்க
முடியுமா உன்னால. சும்மா அதையும் இதையும் பேசிட்டு கிடக்காத..’’ என்று அவரின்
வாயடைப்பான்.
மற்ற தோழிகள் எல்லாம், அந்த மூன்று நாட்களில் கொல்லைப்புறம் தாங்கள்
ஒதுக்கப்படுவதை வேதனையோடு பகிரும் போது, மளிகை சாமான் வாங்கும் போது, அதில்
தங்கைக்கு அணையாடையை சேர்த்து வாங்கும் தங்க பாண்டியை எண்ணி மனதிற்குள் பூரித்து
போவாள்.
திருமணம் முடிந்து அவளை தனிக் குடித்தனம் அனுப்பும் போது கூட, வைசாலி அவளுக்கு
மூன்று மாதங்களுக்கு தேவைப்படும், அணையாடைகளை வாங்கி வைத்து அனுப்பியிருந்தாள்.
அது போன மாதம் வரை கை கொடுத்தது. இப்படி மாலை நேரத்தில் ஒரு இக்கட்டு வரும்
என்று எதிர்பார்த்திராத பூங்கொடி, வழக்கம் போல தனக்கு தேவையானவற்றை பட்டியலிடும்,
மகிழனிடம் இதையும் சொல்லிவிட்டாள்.
ஆனால் நேரில் அவன் முகத்தில் கண்ட அசூசையில் பூங்கொடி உண்மையில் திகைத்துப்
போய்விட்டாள். முதல் முறையாக இம்மாதிரியான நேரத்தில் சக மனிதன் ஒருவனின்
ஒதுக்கதிற்கு உள்ளாகும் அதிர்ச்சி அவளுக்கு.
ஏற்கனவே இருந்த உடல் வலியோடு, தற்சமயம் மனவலியும் சேர்ந்துக் கொள்ள , ஏனோ கீழே
இறங்கிப் போய், அவன் வாங்கி வந்த பொருளை எடுத்துக் கொள்ள அவள் சுய கௌரவம்
தடுத்தது.
தன் முகத்தை நிமிர்ந்தும் பாராது, மகிழன் கடந்து சென்ற விதம் அவளுள் வேதனையை
கிளப்ப, வேகமாய் தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டவள், தலையணையை விழி
நீரால் நனைக்க துவங்கினாள்.
தன் அறையில் இருந்து வெளிப்பட்டு சற்று நேரம் தொலைகாட்சியில் செய்தி சேனல்களை
பார்த்துக் கொண்டிருந்தவன், இரவு உணவு வேளை தாண்டியும் அறையிலிருந்து பூங்கொடி வெளிப்படாமலிருக்கவும், மகிழன் எழுந்து சென்று அவளின் அறைக் கதவை தட்டினான்.
முதலில் பூங்கொடியிடமிருந்து பதிலின்றி போகவும் அவள் உறங்கி இருப்பாள் என்றே
மகிழன் எண்ணினான். ஆனால் மிக மெல்லிய விசும்பல் ஒலி அவன் செவி எட்டவும், அடுத்த
நொடி, மகிழன் அவளின் அறைக்கதவை திறந்திருந்தான்.
“பூங்கொடி..’’ அவன் மெதுவாய் அழைக்கவும், தலையணையில் முகம் கவிழ்த்து
இருந்தவள், மெதுவாய் நிமிர்ந்து பார்த்தாள். நெடு நேரம் அழுகையில் கரைந்ததில்
விழிகள் லேசாய் சிவந்திருந்தது.
அவனையே இமைக்காது பார்த்தவள், “என்னை ஏன் மாமா அப்படி பார்த்தீங்க. ஏதோ தீண்ட
தகாத ஆள் மாதிரி. பீரியட்ஸ் அப்படிங்கிற விஷயம் எல்லா பொண்ணுங்களுக்கும் இயற்கையா
நடக்குற விசயம். ஒரு சானிடரி நாப்கின் வாங்கிட்டு வந்து கொடுக்க சொன்னா..
இதையெல்லாம் என்னை ஏன் வாங்கிட்டு வந்து கொடுக்க சொல்றன்னு கேக்குறீங்க..?
நான் வாங்கிட்டு வர சொன்னா கடலை மிட்டாய்ல இருந்து காட்பரீஸ் சாக்லேட்
வரைக்கும் எல்லாத்தையும் ரொம்ப சந்தோசமா வாங்கிட்டு வருவீங்க. இப்ப மட்டும் எதுக்கு
மாமா திட்றீங்க. அவளோ அருகருப்பான பொருளா அது.
அப்படினா அப்படி ஒரு இயற்கை நிகழ்வை உடம்புல சுமக்குற பொண்ணை நீங்க எப்படி
பாப்பீங்க மாமா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஏழாவது படிக்குற குழந்தை தன்னோட
ஸ்கூல் யூனிபார்ம்ல பீரியட்ஸ் ஸ்டைன் பண்ணிகிட்டானு, அவங்க மிஸ் திட்டினதுல அந்த
குழந்தை மனசு நொந்து சூசைட் பண்ணிகிச்சுனு பேப்பர்ல படிச்சப்ப ரொம்ப அதிர்ச்சியா
இருந்துச்சி.
ஒரு குட்டி பொண்ணு, நம்மோட உடம்பு அசிங்கம் போலன்னு உங்களைப் போல சிலர்
பார்த்த அருவருப்பான பார்வையில தான் மாமா செத்து போய் இருக்கணும்.
நாம செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டாலும் இன்னும் இங்க இதெல்லாம் மாறாது
இல்ல மாமா. நீங்க ஏன் மாமா என்னை அப்படி பாத்தீங்க. எவ்ளோ கஷ்டமா இருந்துச்சி
தெரியுமா..?’’ சொன்னவளின் விழிகளில் மீண்டும் நீர் திரள, மகிழன், “பூங்கொடி..’’
என்று வேகமாய் அவள் அருகில் வந்தான்.
நீரில் மிதந்த விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “வேண்டாம்... நீங்க என்
பக்கத்துல வரக் கூடாது. என் ஒட்டு மொத்த குடும்பமும் உங்க கண்ணுல தெரியும் எனக்கு.
ஆனா நான் உங்களுக்கு இப்ப வரை யாரோ ஒரு சாதாரண பொண்ணு தானே.’’ பூங்கொடி அப்படிக்
கேட்கவும்,
“அப்படியெல்லாம் இல்ல பூங்கொடி...!’’ அவன் அடுத்த வார்த்தை உரைக்கும் முன்,
“என் ரூமை விட்டு வெளிய போங்க ப்ளீஸ்..! எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்.’’ என்று
உரத்து குரல் கொடுக்க, மகிழனின் தன் மானம் அடிவாங்கியது.
அவளையே சற்று நேரம் உறுத்து பார்த்தவன், பின்பு அவள் மேல் காட்ட முடியாத
கோபத்தை அறைக் கதவின் மீது காட்டிவிட்டு வெளியேறினான்.
சரியாய் அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, இந்த நேரத்தில்
யார் என்ற குழப்பத்தோடே, மகிழன் கதவை திறந்தான்.
வெளியே மருது நின்றுக் கொண்டிருந்தான். அவன் கைகளில் சற்று நேரத்திற்கு முன்,
மகிழன் வாங்கியதைப் போன்ற அதே கருப்பு நிற நெகிழி. அந்த நிறத்தை வைத்தே
உள்ளிருக்கும் பொருளை மகிழன் ஊகித்துவிட்டான்.
இவன் வாங்கி வந்ததை ஏற்காத அடுத்த நொடி அவள் தன் அண்ணனிற்கு அழைத்திருக்க
வேண்டும். தங்கை அழைத்ததும் தமையன் இரண்டே மணி நேரத்தில் காரை விரட்டி வந்திருக்க
வேண்டும்.
மகிழன் தன்னுடைய ஊகத்தில் மூழ்கியிருக்க, “எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை..’’
என்`ற மருதுவின் குரல் அவனை மீட்டது.
“ஹும்.. நல்லா இருக்கேன். உள்ள வாங்க.’’ என்றவன், வாயிலில் இருந்தே,
“பூங்கொடி’’ என குரல் கொடுக்க, மருதுவோ, “நானே உள்ள போய் பாத்துக்கிறேன்
மாப்பிள்ளை. நீங்க ப்ரீயா இருங்க.’’ என்றுவிட்டு பூங்கொடியின் அறை நோக்கி
நடந்தான்.
அடுத்த கால் மணி நேரத்தில், பூங்கொடி அறையை விட்டு வெளியே வந்தாள். முகத்தில்
ஆங்காங்கே ஒட்டியிருந்த நீர் துளிகள், அவள் அந்நேரத்தில் குளித்திருக்கிறாள்
என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் மருதுவோ, வேலைக்கார பெண்மணி சமைத்து வைத்திருந்த, உணவு ஆறிப்
போயிருக்க, தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, சிறிய வெங்காயம் வதக்கி, வெங்காய
தோசையும், மிளகு முட்டை தோசையையும் இருவருக்கும் ஊற்றிக் கொடுத்தான்.
மகிழன் முதலில் தயங்கிய போதும், மருது தயாரித்துக் கொடுத்த உணவின் சுவையில்
மயங்கியவன், காரச் சட்டினியோடு ஆறு தோசைகளை உண்டு முடித்திருந்தான்.
இரவு உணவு முடிந்ததும், தரையில் அமர்ந்திருந்த மருதுவின் மடியில், பூங்கொடி
தலை சாய்த்துக் கொள்ள, மகிழன் அவர்களின் பிணைப்பை ஆச்சர்யமாய் ரசித்துக்
கொண்டிருந்தான்.
தன்னையும் மீறி முகிழ்த்த உறக்கத்தில் வரவேற்பறை சோபாவில் மகிழன் உறங்கிவிட,
விடியற் காலையில் மருது ஊருக்கு கிளம்பி இருந்தான்.
ஆனால் அடுத்த நாள் விடியலில் இருந்து அவன் கண்ட, பூங்கொடி முற்றிலும் வேறொரு
பெண்ணாய் இருந்தாள்.
மழை பொழியும்.
Super mam
ReplyDelete