mazhai - 10

மழை – 10

மகிழன் சற்று நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் தன் பார்வையை கையிலிருந்த மதுபான குடுவையில் பதித்திருந்தான். பூங்கொடி விழி அகற்றாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பெரு மூச்சுடன் நிமிர்ந்தவன், “லைப்ல எப்பவும் நமக்கு பிடிச்ச விசயத்துக்கும் பிடிக்காத விசயத்துக்கும் நடுவுல ஒரு போராட்டம் நடந்துட்டே இருக்கும். நிறைய நேரம் நமக்கு பிடிக்காத விசயத்தை ஏத்துக்க சொல்லி வாழ்க்கை வற்புறுத்தும். நாமும் வேற வழி இல்லாம நிறைய நேரம் வளைஞ்சி கொடுத்து போயிடுவோம்.

ஆனா ஒவ்வொரு முறையும் வளைஞ்சி கொடுக்குறப்ப ஏற்படுற வலி இருக்கே, அது அப்படியே ஒரு வடு மாதிரி நம்ம மனசுல பதிஞ்சிடும்.

என்னோட அஞ்சி வயசுல இருந்து பிடிச்ச விசயத்துல இருந்து விலகிப் போற வலியை அனுபவச்சி அனுபவிச்சி... கிட்டத்தட்ட வலியை உணரவே முடியாத அளவுக்கு என் மனசு மரத்துக் கூட போயிருக்கும்.’’

அந்த வார்த்தையை உச்சரிக்கும் பொழுது மகிழனின் விழிகள் சற்றே கலங்க, பூங்கொடி தனக்குள் அவன் வலிகள் ஊடுருவி செல்வதைப் போல உணர்ந்தாள்.

மீண்டும் சற்று நேரம் மௌனம் காத்தவன், தொண்டையை செருமி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,

“சின்ன வயசுல முதல் முதல்ல வீட்டுப் பக்கத்துல இருந்த ப்ளே ஸ்கூல்ல டேடி என்னை சேர்த்துவிட்டப்ப எனக்கு அந்த ஸ்கூல் ரொம்ப பிடிச்சி போச்சு.

அங்க இருந்த ரோவா மிஸ்... டெய்லி தலைக்கு டெய்சி பூ வச்சிட்டு வந்த குட்டி சஞ்சனா. கூண்டுல இருந்த வைட் ராபிட்ஸ். நான் டெய்லி அந்த ராபிட்ஸ்க்கு கேரட் கூட கொண்டுப் போவேன். இப்படி அங்க இருந்த எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு.

ஆனா எனக்கு அஞ்சி வயசு ஆனதும், டேடி என்னை பெரிய போர்டிங் ஸ்கூல்ல சேத்தினார். என்னால நான் ஏற்கவே படிச்சிட்டு இருந்த குட்டி ஸ்கூலை பிரியவே முடியல.
`             
எல்லாத்துலையும் எனக்கு ‘தி பெஸ்ட்டை’ கொடுக்கணும்னு ஆசைப்பட்ட என் டாடி அந்த பெஸ்ட் விஷயம் எனக்கு பிடிச்ச விசயமா இருக்கான்னு கவனிக்க தவறிட்டார்.

முதல் முதலா என்னோட ஸ்கூல்ல தொடங்கின இந்த காம்ப்ரமைஸிங் நான் வளர வளர அதிகமாயிட்டே வந்துச்சி.

எனக்கு சயின்ஸ்தான் பிடிக்கும். ஆனா அப்பா என்னோட லைப்புக்கு மேக்த்ஸ் தான் ரொம்ப நல்லதுன்னு சொன்னார்.

எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விசயத்தை அவரை சேடிஸ்பை செய்றதுக்காக செய்வேன். ஆனா கொடுமையிலும் கொடுமையா அதுவும் எனக்கு ரொம்ப நல்லாவே வந்துச்சி.

என்னோட பதிமூணு வயசுல ஜூனியர் லெவல் ஜிம்னாஸ்டிக் காம்படீஷன்ல செலக்ட் ஆனேன். ஆனா அப்பா சின்ன வயசுல இருந்து அவர் ட்ரைன் பண்ண ஸ்விமிங் காம்படீஷன்ல தான் நான் கலந்துக்கணும்னு என்னை ஜிம்னாஸ்டிக் போட்டியில இருந்து விலக வச்சார்.

எங்க டீச்சர்ஸ் எல்லாம் நம்ம இந்தியால நிறைய ஸ்விம்மர்ஸ் இருக்காங்க . ஆனா பெஸ்ட் ஜிம்னாஸ்டிக் ப்ளேயர்ஸ் தான் இல்லைன்னு எவ்வளவோ வாதாடிப் பார்த்தாங்க.
ஆனா டாடி ஸ்டபானா மறுத்திட்டார். அவர் ஆசைப்பட்ட மாதிரி ஜூனியர் லெவல் ஸ்விமிங் காம்படீஷன்ல நான் கோல்ட் மெடல் வாங்கினேன். ஆனா அந்த மெடல் எனக்கு கொஞ்சம் கூட சந்தோசத்தையே தரல.  

நான் காலேஜ் படிக்கும் போது, பைக் ரேஸ் பக்கம் என் கவனம் போச்சு. இந்தவாட்டி ரொம்ப கவனமா, என்னோட அந்த கிரேஸை டாடி கண்ல படாம பாத்துகிட்டேன்.

காலேஜ் முடிஞ்ச சமயத்துல நடந்த காமன்வெல்த் போட்டியில கோல்ட் மெடல் வாங்கினதும் அப்பாவுக்கு பெருமை பிடிபடல. என்னை தலைக்கு மேல வச்சி கொண்டாடிட்டு இருந்தார்.

அந்த சமயத்துல ஆட்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் மயூரா என்னோட வாழ்க்கையில வந்தா. நான் நடிச்சிட்டு இருந்த அதே ஸ்டுடியோல அவளோட ஆட் பிலிம் சூட்டும் அப்போ நடந்துட்டு இருந்தது.

அவளா தான் என்கிட்ட அவளை அறிமுகப்படுத்திகிட்டா. இந்தியாவோட நம்பர் ஒன் மாடல் அவ அப்போ. ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சோம்.

கொஞ்சநாள் கழிச்சி ரெண்டு பேரும் லவ்வை ஷேர் பண்ணிகிட்டோம். நானும் அடுத்தடுத்து நடந்த ஸ்விம்மிங் காம்படீஷன்ஸ்ல வரிசையா கோல்ட் மெடலை அள்ளிட்டு வந்தேன்.

என்ன சுத்தி ஒரே வெளிச்சம். புகழ் வெளிச்சம். வீட்டை விட்டு வெளிய வந்தா எப்பவும் கேமரா ப்ளாஷ். உலக அழகி மாதிரி ஒரு காதலி. அடுத்த ரெண்டு வருஷம் நான் முழுக்க முழுக்க சொர்கத்துல தான் இருந்தேன்.. இல்ல இல்ல மிதந்தேன்.

மறுபடி அப்பாவோட விருப்பம் என் வாழ்க்கைக்கு குறுக்க வந்துச்சு. டென்னிஸ்ல இந்திய அளவுல சாதிச்ச ஒரு பொண்ணை டாடி என்னோட லைப் பார்ட்னரா சூஸ் பண்ணார்.

இந்தமுறை நான் வெளிப்படையா டாடியை எதிர்த்தேன். என்னோட லவ்வை அவருக்கு புரிய வைக்க முயற்சி செஞ்சேன். ஆனா அவரு வழக்கம் போல ஒரு பிஸ்னஸ் மேக்னட்டா என்னோட வாழ்கையை தோக்கடிச்சார்.

மயூராவுக்கு ஹிந்தி சினிமால உச்சத்துல இருந்த ஹீரோவுக்கு ஜோடியா நடிக்க சான்ஸ் வாங்கிக் கொடுத்தார். முதல் படமே அவ கனவுலையும் நினச்சி பார்க்க முடியாத ஹீரோவோட.

மயூரா அவ கனவுக்காக என்னோட காதலை பலி கொடுத்துட்டா. மயூரா விலகிப் போயும் கூட நான் ப்ரணிதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல. டாடி என்னோட வீக்னஸ் பாய்ன்ட் தேடி அடிச்சார்.

நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா அடுத்த மாசம் நடக்கப் போற பார்முலா ஒன் பைக் ரேஸ்ல நான் கலந்துக்க எல்லா ஏற்பாடும் செஞ்சிக் கொடுக்குறதா சொன்னார்.

எங்க அப்பாவுக்கு தெரியாம என் வாழ்கையில எதுவுமே நடக்க முடியாதுன்னு அப்போ தான் புரிஞ்சது.

நான் ஒரு ஹியூமன் ரோபோ மாதிரி பீல் பண்ண ஆரம்பிச்சேன். அப்பா தேர்ந்தெடுத்துக் கொடுக்குற வாழ்க்கையையே வாழலாம்னு முடிவு செஞ்சேன்.

ப்ராணிதாவுக்கும் எனக்கும் கிராண்டா மேரேஜ் நடந்தது. சென்னை, பெங்களூர், மும்பை எல்லா ஊர்லையும் ஒரு வாரம் தொடர்ந்து எங்க கல்யாண ரிசப்சன் நடந்துட்டே இருந்தது.

சரியா எங்க ரிசப்சன்லாம் ஓஞ்சதும் பார்முலா ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு. நானும் ப்ரணித்தாவும் அப்போ தான் ஹாய், ஹெலொன்னு பேசிக்க ஆரம்பிச்சி இருந்தோம்.

அவளுக்கும் டென்னிஸ் டோர்னமென்ட் ஸ்டார்ட் ஆக அவ டெல்லி கிளம்பினா. நான் சென்னையில பைக் ரேஸ்ல இருந்தேன். ப்ரணிதா அப்பாவுக்கு என்னோட பைக் ரேஸ் இன்ட்ரஸ்ட் கொஞ்சமும் பிடிக்கல.

அப்பா தான் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு இருந்தார். முதல் ரெண்டு ரவுன்ட்ல ஈசியா வின் பண்ணேன். ஆனா மூணாவது ரவுன்ட்ல...’’

அத்தனை நேரம் அமர்ந்து இருந்தவன், வார்த்தைகளை நிறுத்திவிட்டு, அப்படியே சரிந்து படுத்தான். கண்கள் நேராய் வானை வெறிக்க, மீண்டும் மௌனம் அவ்விடத்தை சூழ்ந்தது.

அவனின் புஜத்தில் தன் கரத்தை பதித்தவள், “போதும்.. மாமா... நாளைக்கு பேசிக்கலாம். வாங்க தூங்க போகலாம்.’’ அவள் வார்த்தைகள் எதுவும் செவியில் ஏறாதவன் போல மகிழன் அப்படியே கிடந்தான்.
அவன் கரத்தினை தன் தாடை மூலம் சிறை செய்தவன் மீண்டும் பேச துவங்கினான். இம்முறை குரல் முழுக்க அப்படி ஒரு வலி.

“அந்த மூணாவது ரவுண்ட்ல... நான் எனக்கு முன்னாடி போயிட்டு இருந்த வண்டியை ஓவர் டேக் செய்யும் போது.. அவனும் சரியா என்னோட பார்டர்குள்ள வந்து... ஒரு நிமிஷம் என்ன நடந்ததுன்னே புரியல.

அடுத்து நான் கண் முழிச்சி பாக்கும் போது என்னோட வலது காலை, கணுக்கால் வரை எடுத்து இருந்தாங்க. மோசமான கிரஷ் இஞ்சுரின்னு டாக்டர்ஸ் பேசும் போது சொன்னாங்க.

அதோட முதுகு தண்டுலையும் நல்ல அடி. இடுப்புக்கு கீழ உணர்வே இல்ல எனக்கு. ஆப்ரேசன் செஞ்சாலும் மறுபடி உணர்வு திரும்ப பிப்டி பர்சன்ட் தான் சான்ஸ் இருக்குன்னு சொன்னாங்க.

என்னை விட அப்பா ரொம்ப உடஞ்சி போயிட்டார். எங்க மாமானார் வீட்ல இருந்து ஏதோ சாங்கியத்துக்கு வந்த மாதிரி எட்டிப் பார்த்துட்டு போயிட்டாங்க. சரியா ஒரு வாரம் கழிச்சி ப்ரணிதாகிட்ட இருந்து எனக்கு டிவோர்ஸ் நோட்டிஸ் வந்துச்சி.

கொஞ்சமும் யோசிக்காம நான் கையெழுத்து போட்டு கொடுத்தேன். அப்பா அந்த சமயத்துல ரொம்ப பேசினார். நான் ஆசைபட்டேன்னு என்னை ரேஸ்ல கலந்துக்க அலோ பண்ணினது அவர் செஞ்ச பெரிய முட்டாள்தனம்னு அவரை அவரே திட்டிகிட்டார்.

எனக்கு சரியான எந்த விசயத்தையும் லைப்ல செலெக்ட் பண்ணவே தெரியாதுன்னு சொன்னார். ஆப்ரேசன் முடிஞ்சி நான் திரும்பி எழுந்து நடந்ததும் மறுபடி நான் ஸ்விம் பண்ண எனக்கு ஸ்பெஷல் கோச் ரெடி பண்ணப் போறதா சொல்லிட்டு இருந்தார்.

எனக்கு இருந்த மன நிலையில அவர் பேச்சை என்னால டாலரேட் செய்யவே முடியல. ‘இனி நான் எப்பவும் யானி இல்லை டாடி. மகிழன். நீங்க என்னோட வாழ்கையில தந்ததா சொன்ன புகழ், பணம், பெருமை எதுவுமே இப்ப இங்க இல்ல டாட். எதுவுமே. நான் தனியா இருக்கேன். ரொம்ப தனியா.

யாருமே எனக்காக என்னை நேசிக்கவே இல்ல டாட். எல்லாருமே என் பேருக்கு பின்னாடி இருந்த டைட்டிலை தான் நேசிச்சி இருக்காங்க. தி கிரேட் ஸ்விம்மர் யானி. நீங்க பாத்த பொண்ணு கூட என்னை நேசிக்காம என் டைட்டிலை நேசிச்சி இருக்கா. அதான் இனி நான் ஸ்விம் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சதும் என்னை தூக்கி போட்டுட்டு போயிட்டா.

இனி எனக்கு இந்த ஸ்விமிங் கொடுத்த எந்த அடையாளமும் வேண்டாம் டாட். ஐ ஹெட் ஸ்விமிங். இனி வெள்ளத்துல முங்கி சாகுற நிலை வந்தா கூட இந்த மகிழன் ஸ்விம் பண்ண மாட்டேன். ஐ ரியலி ஹேட் ஸ்விம்மிங்.’ அப்படின்னு அப்பாகிட்ட ரொம்ப கத்திட்டேன்.  

அதுக்கு அப்புறம் அப்பாவும் நானும் முகம் பார்த்து பேசுறதே குறைஞ்சி போயிடுச்சி. ஏழு மாசம் கிட்டத்தட்ட படுத்த படுக்கையா கிடந்தேன். அப்பாவோட உடம்பும் மனசும் என்னைப் பார்த்து பார்த்து தினமும் உடைய ஆரம்பிச்சது.

என்னை சுத்தி இருந்த மொத்த வெளிச்சமும் ஒரேடியா இருட்டா ஆயிடுச்சி. என்னை தேடி வந்த ரெண்டு மூணு பிரண்ட்ஸ்சையும் எனக்கு இருந்த வெறுப்புல நான் சந்திக்கல.

உன்னால கற்பனை பண்ண முடியுதா பூங்கொடி. கால் விரல் நகம் கூட அழுக்குப்படாம, அருவி மாதிரி துள்ளிகிட்டே வாழ்ந்த பையன் இருபத்திநாலு மணிநேரமும் ஒரே படுக்கையில அசையாம கிடந்து, ஒவ்வொரு தேவைக்கும் அடுத்தவங்களை எதிர்பார்த்து கிடக்குறது... நரகம் இதை விட பெருசா மோசமா இருக்காதுன்னு உணர்ந்த நேரம் அது.

அப்பா சர்ஜரிக்கு என்னை லண்டன் அனுப்பி வச்சார். அது தான் நான் அவரை கடைசியா பார்த்தது. ட்ரீட்மென்ட் முடிஞ்சி நான் திரும்பி வரும் போது அப்பா படத்துக்கு மாலை போட்டு வச்சி இருந்தாங்க.

அப்பா இறந்ததை சொன்னா என்னோட ட்ரீட்மென்ட் பெயிலியர் ஆயிடுமோன்னு என்கிட்ட மறைச்சிட்டாங்க. எனக்கு பிடிக்கலைனாலும் ஒவ்வொரு முறை நான் வின் பண்ணும் போதும், ‘வெல்டன் மை பிரின்ஸ்’ அப்படின்னு முதுகுல தட்டிக் கொடுக்குற கையோட கதகதப்பு இருக்குமே... அதுக்காகவே ஆயிரம் மெடல் ஜெயிக்க தோணும்.

இனி அந்த கையும் வாழ்கையில இல்லைன்னு புரிஞ்சது. தொழில்ல கூட கொஞ்சம் நஷ்டம். அப்பா செஞ்ச எதையும் தொடர்ந்து செய்யப் பிடிக்கல.

அப்போ தான் தாத்தா ஊர்ல இருந்த இடத்துல மில் தொடங்கலாம்னு தோணுச்சு. சரியா எனக்கு ஆக்சிடன்ட் நடந்து ஒன்றரை வருஷம். இந்த உலகம் யானியை சுத்தமா மறந்துடுச்சி. என் முகத்தை கூட யாருக்கும் அடையாளம் தெரியல. 
அது எனக்கு ஒரு வகையில சந்தோசமாவும் இருந்துச்சி. பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சப்ப கண்ணாடியில எந்த முகத்தை பார்க்க பிடிக்காம இருந்துச்சோ, அந்த முகம் தான் இனி எனக்கு புது வாழ்கையா இருக்கப் போகுதுன்னு முடிவு செஞ்சேன்.

கொஞ்சம் கொஞ்சமா ஒரு சாதாரண மனுசனா வாழ முடிவு செஞ்சேன். அம்மா மறுபடி எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க. வேண்டாம்னு எவ்ளோ சொன்னாலும் கேக்கல.

ஒரு காலத்துல நான் நிமிர்ந்து பாக்க மாட்டேனா அப்படின்னு ஏங்கின பொண்ணுங்க எல்லாம் என் முகத்துக்கு நேராவே, என்னை வேண்டாம்னு சொன்னாங்க.

எனக்கு கல்யாணம் தள்ளி போக தள்ளி போக அம்மாவுக்கு ஒரே கவலை. நிலைமை இப்படி இருக்கும் போது நான் மறுபடி மயூராவை ஒரு மால்ல மீட் பண்ணேன்.

அப்போ என் கூட எங்க அம்மாவும் இருந்தாங்க. மயூரா என்னைப் பார்த்ததும் என் கைய பிடிச்சிட்டு அன்பா பேசினா. அம்மா அவளை எங்க கூட காபி சாப்பிட கூப்பிட்டாங்க. எங்க லவ் அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும்.

அவ நார்மலா பேசிட்டு இருக்கும் போதே, அம்மா அவளைப் பார்த்து, ‘உங்க லவ் சக்சஸ் ஆகணும்னு தான் மகிழ் வாழ்கையில கடவுள் அத்தனை கஷ்டத்தையும் கொடுத்தார் போல. நீ சொல்லுமா உங்க வீட்ல நான் எப்ப வந்து பேசட்டும்.’ அப்படின்னு ரொம்ப அன்பா கேட்டாங்க.


அம்மா அப்படிக் கேட்டதும், உட்கார்ந்து பேசிட்டு இருந்தவ படக்குன்னு எந்திரிச்சிட்டா.

‘ஆன்டி. வெரி சாரி. நான் யானி மேல இருந்த சிம்பதில தான் அவர்கிட்ட பேச வந்தேன். ஒரு ஹான்டிகேப்டு... அண்ட்  செகண்ட் ஹான்ட் பர்சனை மேரேஜ் பண்றதை எல்லாம்... என்னால நினச்சி கூட பார்க்க முடியாது ஆன்டி. தேங்க்ஸ் பார் த காபி....’ அப்படின்னு சொல்லிட்டு கடகடன்னு வெளிய போயிட்டா.

அம்மாவுக்கு என் குறைய என் முன்னாடியே சொல்லிக் காட்டினது ரொம்ப பெரிய அதிர்ச்சியா இருந்தது.

அம்மா அதுக்கு அப்புறம் அவங்க ஊர்ப் பக்கம் எனக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க. அவங்க நினைச்சபடி அவ்ளோ ஈசியா எனக்கு பொண்ணு கிடைக்கல.

எனக்கு கல்யாணமே வேண்டாம்னு நானும் விடாப்பிடியா அம்மாகிட்ட போராடிட்டு இருந்தேன். இனி வர பொண்ணு மிச்சம் என் வாழ்கையில இருக்குற காசு பணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிகிட்டாலும், அவ மனசுலயும் நான் ஒரு ஹாண்டிகேப் அண்ட் செகண்ட் ஹான்ட் அப்படிங்கிற எண்ணம் இருக்குமேன்னு எனக்கு உறுத்திக்கிட்டே இருந்துச்சு.

கடைசியா அம்மா உன்னை பொண்ணுன்னு கை காட்டினாங்க. நான் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னேன். நான் ஒத்துக்கலைனா அம்மா பெங்களூர் வீட்டை வித்துட்டு ஆஸ்ரமத்துல சேரப் போறதா மிரட்டினாங்க.


எவ்வளவோ போராடிப் பார்த்தேன். கல்யாணத்தை நிறுத்த. பட் நீ என்னோட லைப்ல வந்த.

என்னை சிரிக்க வச்ச. கோபப்பட வச்ச. பொறாமை பட வச்ச. நான் எதிர்பார்த்த ஆர்டினரி லவ்வபிள் லைப் திரும்ப கிடச்ச பீல் எனக்கு. ஆனா நீயும் மறுபடி ஸ்விம்மிங்னு வந்து நிக்குற. சொல்லு பூங்கொடி இப்போ நான் என்ன செய்யணும்.’’

தன் கையிலிருந்த மதுபான உருளியை கீழே வைத்தவன், அவள் கண்களுக்குள் ஆழப் பார்த்து கேட்க, இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல், சற்று நேரம் அவன் கண்களையே பார்த்தவள், மகிழன் தொட்டமல் வைத்திருந்த மற்றும் ஒரு மதுபான உருளியை எடுத்து ஒரே மூச்சில் தன் தொண்டைக்குள் சரிக்க தொடங்கினாள்.

இத்தனை நேரம் ஏறிய மொத்த போதையும், ஒரே நிமிடத்தில் தெளிய மகிழன் பூங்கொடியின் செய்கையை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

மழை பொழியும். 

Comments

Popular posts from this blog

Mazhai - 15 (Final ud)

mazhai - 12

enakenap peiyum mazhai