mazhai - 2
மழை – 2
தன் கண் முன் நடக்கும் நாடகத்தனமான காட்சிகளை எரிச்சலுடன் பார்த்தபடி மகிழன்
பூங்கொடியின் வீட்டு வாயிலில் அமர்ந்திருந்தான். இன்னும் எத்தனை நேரம் இந்த
காட்சியை எல்லாம் சகிக்க வேண்டுமோ என அவன் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமையை
இழக்க தொடங்கியிருந்தது.
அவனால் பெண்களான அவள் அண்ணிகள் கண்ணீர் வடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ள
முடிந்தது. ஆனால் ஆண்களான அவள் அண்ணன்கள் பிறர் வேடிக்கைப் பார்ப்பதை கொஞ்சமும்
பொருட்படுத்தாமல், வேட்டியின் முனையை
கையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க சிவக்க அழுவதை காணும் போது,
அதிர்ச்சியை விட அதிக ஆச்சர்யமாக இருந்தது.
பூங்கொடியின் தந்தை கூட அவ்வபோது கலங்கும் தன் விழிகளை லேசாய் சுண்டி விட்டு
சமாளிப்பதை பார்த்தபடி தானிருந்தான்.
ஆனால் இரண்டு மணி நேரங்களுக்கு முன்னால், தன் கையால் தாலி கட்டிக்கொண்ட
மனையாளோ, மிக இறுக்கமாய் வாசலில் இருந்த பாதாம் மரத்தின் தாழ்ந்த கிளை ஒன்றில்
முழுதாய் சாய்ந்து நிரம்ப அழுத்தமாய் நின்றிருந்தாள்.
கண்களில் அப்படி ஒரு பிடிவாத தோரணை. தன் பிடித்தமின்னைமையை எல்லாம்
மறந்துவிட்டு, ‘இவளையும் கட்டாயப்படுத்தி தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சி
இருப்பாங்களோ..?’ என்று அவன் மனம் சிந்திக்க தொடங்கி இருந்தது.
கந்தவேலனின் மூத்த சகோதரி பாமா, “ஏண்ணே... பொட்டபிள்ளைனா... பொறந்த அன்னைக்கே
அடுத்தவங்க வீட்டுக்கு போறவன்னு தெரிஞ்சி தானே வளக்குறோம். நீயே இப்படி கண்ணை
கண்ணை கசக்கிட்டு நின்னா.. நீ பெத்த மூணு சிங்கமும் வயக்காட்டுக்கு மடை மாத்தின
மாதிரி பொங்கிப் பொங்கி அழுதுகிட்டு திரியுதுக.
சம்மந்த கலப்பை எல்லாம் மண்டபதுலையே முடிச்சது எதுக்கு? நல்ல நேரம்
போறதுக்குள்ள பொண்ணு புகுத்த வீட்டு வாசலை மிதிக்கனும்னு தானே. அடுத்து ஆக வேண்டிய
காரியத்தை பாருண்ணே.’’ என்று கிளப்பிவிடவும், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவர்,
“டேய் மருது,’’ என ஓங்கி குரல் கொடுத்தார்.
தந்தை குரல் கொடுத்த அடுத்த நொடி மருது அவர் முன் வந்து நின்றான். தொடர்ந்து
அழுதத்தின் பயனாய் குரல் சற்றே கரகரபுற்று இருந்த போதும், “சீரை எல்லாம் லாரியில
ஏத்தியாசுப்பா. மாப்பிள்ளை அவர் காரை தவிர வேற எந்த கார்லையும் போக மாட்டாராம்.
நம்ம வீட்டு சார்பா ஏழு பேர் கிளம்புறோம்பா. இன்னும் ரெண்டு நிமிசத்துல
கிளம்பிடலாம்பா. தங்கப் பிள்ளையும், மாப்பிள்ளையும் ஒரு காருல போகட்டும். பின்னாடி
நாங்க நம்ம வண்டியில போறோம்பா.’’
மருதுவின் பதில்களை பொறுமையாய் கேட்டவர், தன் இடக்கரத்தால் மீசையை நீவிக்
கொண்டே,
“ம்... சரி சரி.. அப்போ வீட்டு சாமிக்கு கற்பூரத்தை காட்டுங்க.. நம்ம வீட்டு
பொண்ணு புகுந்த வீட்டுக்கு கிளம்பட்டும்.’’ என சொல்ல, வாயிலில் போடப்பட்டிருந்த
பந்தலில் வேண்டியபடி இருக்கைகளை நகர்த்திப் போட்டு இலகுவாய் அமர்ந்திருந்த கூட்டம்
மொத்தமும் வீட்டிற்குள் நுழைய தயாரானது.
வைசாலி மண்டபத்திலிருந்து வந்ததில் இருந்து, பாதம் மரத்தை விட்டு அகலாமல்
அமர்ந்திருந்த பூங்கொடியை கரம் பற்றி வீட்டிற்குள் இழுத்தாள்.
மகிழனின் அருகில் அவன் தாய் வந்து நிற்க, அவனும் மெதுவாய் எழுந்து அவர்கள்
வீட்டிற்குள் நுழைந்தான்.
மருது பூஜை அறையில் கற்பூர ஆரத்தியை காட்ட, அனைவரும் கை குவித்து வணங்கி
நின்றனர். ஒருவழியாய் வீட்டு சாமிக்கு பூஜை முடிந்ததும், மகிழனின் வாகனத்தின்
நான்கு சக்கரங்களிலும் எலும்பிச்சை பழத்தை செந்தூரன் வைக்க, மகிழன் தன் வாகனத்தில்
ஏறி அமர்ந்தான்.
பட்டுப் புடவை சரசரக்க, சற்றே குனிந்த தலையுடன் பூங்கொடி மகிழனின் வாகனம்
நோக்கி நடந்து வந்தாள். அவள் அருகில் வைசாலி, பூங்கொடியின் மிக முக்கிய உடைமைகள்
சுமந்த பயணப்பொதி ஒன்றை தான் சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள்.
காரின் பின் இருக்கை கதவை திறந்த வைசாலி பயணப் பொதியை அங்கே வைக்க, பூங்கொடி
தானும் பின் இருக்கையில் ஏறி அமர முயன்றாள்.
ஆனால் அவளின் எண்ணத்தை ஊகித்த வைசாலி, அவளின் கரத்தை அழுந்தப்பற்றி அவளை முன்
இருக்கை நோக்கி யார் கவனத்தையும் கவராமல் நகர்த்தினாள்.
வைசாலியை ஒரு முறை ஊன்றிப் பார்த்தவள், அவள் கரத்தினின்று தன் கரத்தை
பிரித்துவிட்டு, முன் கதவை திறந்து மௌனமாய் வண்டிக்குள் ஏறினாள். வைசாலி தன்னை
ஏறிட்டும் பார்க்காத தோழியை கண்களில் வலியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் பிடிவாதமாய் பூங்கொடி தன் பார்வையை, தழைத்தே அமர்ந்திருந்தாள். அதுவரை
அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முனையாத மகிழன்,
“சென்ட் ஆப் பண்ண வரவங்களுக்கு ப்ராப்பரா பாய் சொல்லணும் அப்படிங்கிற சாதரண மேனர்ஸ்
கூட தெரியாத உனக்கு.’’ என்று எரிச்சலாய் மொழிய, பூங்கொடி விலுக்கென அவனை
நிமிர்ந்து பார்த்தாள்.
அதுவரை சங்கடமாய் வெளியே நின்றுக் கொண்டிருந்த வைசாலி, ‘பக்’கென சிரித்துவிட,
உடனே தன் கோபப் பார்வையை பூங்கொடி வைசாலியை நோக்கி திருப்பினாள்.
“என்ன இளிப்பு. நாத்தனாரை பார்சல் பண்ற சந்தோசமா..? ரொம்ப சந்தோசப்படாத. எங்க
அண்ணனுக்கு ‘கீ’ கொடுக்க எனக்கு செல்போன் போதும்.’’ என்றவள் அவளுக்கு வாயை
கோணித்து காண்பித்துவிட்டு, மீண்டும் மகிழனிடம் திரும்பி,
“சென்ட் ஆப் பண்ண வந்தா சிரிக்கணுமா...? என்னை இவங்க சென்ட் ஆப்லாம் பண்ண வரல.
என் வீட்டைவிட்டு என்னோட சம்மதம் இல்லாம துரத்துறாங்க. சிரிக்க எல்லாம் முடியாது.
முதல்ல நீங்க காரை எடுங்க.’’ என்றவள், இருக்கையில் சாய்ந்தது அமர்ந்து, கண்களை
நன்றாக மூடிக் கொண்டாள்.
இவளுக்கு நேர் மறையாய், வைசாலி முகத்தில் விரிந்த புன்னகையோடு, “ரொம்ப
தாங்க்ஸ் அண்ணா..! கழுத ஒரு வாரமா என்கிட்ட முகம் கொடுத்து பேசவே இல்ல. ஒரே ஒரு
வார்த்தையில நீங்க என்கிட்ட சண்டையே போட வச்சிட்டீங்க. பாத்து போங்க.’’ என்றவள்
தான் நின்றுக் கொண்டிருந்த இடத்தினின்று தள்ளிப் போக, மகிழன், திட்டு வாங்கியதை
ஏதோ பெரிய கேடயம் வாங்கியதை போல மகிழும் அவளைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனான்.
பின்னால் மற்ற வாகனங்கள் தங்கள் ஹாரனை அலறவிட, தன்னிலைக்கு மீண்ட மகிழன், தன்
காரை இயக்கி, அதை முன்னேற்றினான். இரு ஸ்கார்பியோ வாகனங்கள் பின் தொடர, பூங்கொடியின்
புகுந்த வீட்டுப் பயணம் தொடங்கியது.
வாகனம் வேகமெடுத்து நான்முனை சாலையை தொட, அதுவரை விழிகளை மூடி பயணித்துக்
கொண்டிருந்த பூங்கொடி, “காரை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்களேன்.’’ என்று விழிகளை
பிரிக்காமலேயே ஆணையிட, அதில் தனக்கு சற்றும் விருப்பம் இல்லாமல் இருந்த போதும்,
மகிழன் ஒரு பெரிய மரத்தின் நிழலில் சற்றே ஓரமாய் தன் வாகனத்தை நிறுத்தினான்.
வாகனம் நின்றதை அதன் அதிர்வின் மூலம்
அறிந்தவள், மெதுவாய் இறங்கி, பின் பக்க கதவை திறந்து ஏறினாள்.
“மிஸ்டர்... மகிழன்.. ஒரு ரெண்டு நிமிஷம் வெளியே நிக்குறீங்காளா..?’’ அவள் குரலின்
தொனி உணர முடியாவிட்டாலும், “இவ ஒரு பெரிய இம்சையா இருப்பா போல..?’’ என்று
மனதிற்குள் முணுமுணுத்தவன்,
“என்னால எல்லாம்...’’ அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, பூங்கொடி அவள் புடவை
முந்தானையில் இருந்த ஊக்கை எடுக்க, “ஏய்.. ஏய்.. இரு இரு..’’ என்று வேகமாய் குரல்
கொடுத்தவன், அதை விட வேகமாய் தன் முன் இருக்கையிலிருந்து கிட்ட தட்ட வெளியே
குதித்து இருந்தான்.
காரின் நான்கு புற கண்ணாடிகளும் ஏற்றப்பட்டு இருந்தாலும், சுற்றும் முற்றும்
யாரேனும் இருக்கிறார்களா என அவன் கண்கள் கவனித்துக் கொண்டே இருந்தது.
சரியாய் ஐந்து நிமிடங்கள் கழித்து, தான் அமர்ந்திருந்த பின்பக்க இருக்கையின்
ஜன்னலை கீழிறக்கியவள், தனக்கு முதுகுகாட்டி நின்றுக் கொண்டிருந்தவனை நோக்கி,
‘’ஹெலோ..’’ என குரல் கொடுக்க, கோபமாய் திரும்பியவனின் விழிகள் அவள் இருந்த தோற்றம்
கண்டு பெரிதாய் அதிர்ச்சியில் விரிந்தது.
சற்றே தொள தொளப்பாய் இருந்த ஆண்கள் அணியும் சட்டை ஒன்றை
அணிந்து இருந்தவள்,
அதற்கும் கீழ், புடவைக்கு அணிந்து இருந்த உள்பாவாடையோடு இருந்தாள்.
பெரும்பாலான ஆபரணங்கள் உடலில் இருந்து விடை பெற்று இருக்க, கூந்தல் பெரிய
கொண்டையாய் மாறியிருந்தது. ஆங்காங்கே விடுபட்ட கூந்தல் காதின் ஓரம் அடைக்கலமாகி
இருந்தது. ஏதோ சோபன அறையில் இருந்து வெளிப்படும் புது மணப்பெண் போல கலைந்து,
நலுங்கி இருந்தது அவள் தோற்றம்.
மகிழன் அவளை பார்த்தது பார்த்தபடி நிற்க, “ஹெலோ..’’ என்று மீண்டும் அவனை உரக்க
அழைத்தவள், “வந்து காரை எடுங்க வாங்க. உங்க வீட்டுக்கு போக எப்படியும் இன்னும்
அஞ்சி மணி நேரத்துக்கு மேல ஆகும் தானே. உங்க வீடு பக்கத்துல வந்ததும் என்னை
எழுப்புங்க. நான் எழுந்து மறுபடி புடவை கட்டணும்.’’ என்றவள் கை மறைவில் ஒரு
கொட்டாவியை வெளியேற்றிவிட்டு, பின் இருக்கையில் இருந்த குசனை வசதியாய் தலைமாட்டிற்கு
வைத்துக் கொண்டு உறங்க துவங்கினாள்.
புடவை கட்டி இருந்த வரை பெரிய பெண் போல் இருந்த தோற்றம் மருவி, ஏதோ பள்ளி
செல்லும் சிறுமி போல அவள் தோற்றம் புலப்பட, “இத்தனூண்டு இருந்துட்டு என்ன வாய்
பேசுது இது. யப்பா...!’’ என மனதிற்குள் வியந்தவன், உடனே காரை கிளப்ப அவர்கள் பயணம்
பெங்களூரை நோக்கி துவங்கியது.
இடையில் அவன் வண்டியை நிறுத்தி, தேநீர் அருந்திய போது கூட, பூங்கொடி
விழிக்கவில்லை. வீட்டை இன்னும் இருபது நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நிலையில்,
ஆள் அரவமற்ற சாலையில் வண்டியை நிறுத்தியவன், அவளை தொட்டு எழுப்ப மனமற்று, காரில்
இருந்த ஸ்டீரியோவில் மிக அதிக ஒலியில் பாடலை ஒலிக்கவிட்டான்.
அந்த சத்தம் கேட்டு, பூங்கொடி மெதுவாய் தன் இமைகளைப் பிரிந்து எழுந்தாள்.
எழுந்தவுடனே சற்றுப்புறத்தை பார்வையால் அலசினாள். தான் பார்வையால் துழாவிய கடை
கண்னுக்கு சிக்காமல் போகவும், “ஏதாச்சும் டீ ஷாப்கிட்ட நிறுத்தி இருக்க
மாட்டீங்க.’’ என்றவள் தண்ணீர் குப்பியில் இருந்த நீரை எடுத்து பருகிவிட்டு, “சரி
வெளியே போங்க.’’ என சொன்னாள்.
மகிழன், “இனிமே இப்படி கார்ல ட்ரெஸ் சேன்ஜ் பண்றதுலாம் இதுவே பஸ்ட் அண்ட்
லாஸ்ட்டா இருக்கட்டும்.’’ என கடுப்புடன் மொழிந்துவிட்டு கீழிறங்கினான்.
அவனுக்கு உதட்டு சுழிப்பை பதிலாய் கொடுத்தவள், மீண்டும் வேகமாய் உடை மாற்ற
துவங்கினாள். முழுதாய் பத்து நிமிடங்கள் கரைந்தும், பூங்கொடி அழைக்காமல்
இருக்கவும், கொஞ்சம் முன்னால் வந்து, மகிழன் பின் இருக்கையின் ஜன்னலை மென்மையாய்
தட்டினான்.
“இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம்..’’ என பூங்கொடி வேகமாய் பதில் கொடுக்க, மகிழன்
பின்னால் நகர்ந்தான்.
மேலும் ஐந்து நிமிடங்கள் கழிய, பூங்கொடி ஒரு வழியாய் ஜன்னலை திறக்க, அவள்
புறம் சற்றும் பார்வையை திருப்பாதவன், தன் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து
வாகனத்தை கிளப்பினான்.
முன்னால் தாளாரமாக தோட்டத்திற்கு இடம் ஒதுக்கி கட்டப்பட்டிருந்த அந்த பெரிய
வீட்டின் முன் மகிழன் தன் வாகனத்தை நிறுத்த, பூங்கொடி விழிகளால் அந்த வீட்டின்
அழகை உள்வாங்கினாள்.
இவர்களுக்கு முன்னாள் பூங்கொடியின் உறவினர்களோடு, மகிழனின் தாயாரும், மற்ற
உறவினர்களும் வீட்டை அடைந்திருக்க, அனைவரும் வாசலிலேயே இவர்களை வரவை நோக்கி காத்து
நின்றனர்.
மகிழனின் காரைக் கண்டதும், உறவுக்காரப் பெண் ஒருத்தி, ஆரத்தி தட்டோடு
வெளிப்பட, மகிழனின் மனதில், ‘இதுவேறையா..?’ என்ற சலிப்பு எட்டிப் பார்த்தபோதும்,
முகத்தில் மகிழ்ச்சி மின்ன அருகில் நின்ற தாயாரைக் கண்டதும், எதுவும் சொல்ல
முடியாமல் வீட்டை நோக்கி நடந்தான்.
இரண்டடி முன்னால் நடந்தவன், தன்னை தொடர்ந்து பூங்கொடி வெளிவராததை உணர்ந்ததும்,
மீண்டும் வாகனத்தை நோக்கி திரும்பினான்.
அதே நேரம் பூங்கொடி பின் இருக்கை கதவை திறந்து வெளிபட்டாள். இம்முறை அவள்
தோற்றத்தை கண்டவன் மிகப்பெரும் அதிர்ச்சிக்கு ஆளானான்.
ஏனெனில் பூங்கொடி புடவையை ஒழுங்காய் கட்ட தெரியாமல் உடலில் கண்டபடி சுற்றி
இருந்தாள். அவள் சுற்றி இருந்த விதத்தில் புடவை உடலில் கண்டபடி கசங்கி இருந்தது.
மேலும் கலைந்த தலையை அவள் அரைகுறையாய் சீவி இருந்த விதமும், தலையில் சூடி
இருந்த மல்லிகை கசங்கி இருந்த விதமும், தூக்கம் கலைந்ததில் சற்றே சிவந்து இருந்த
விழிகளும், காண்பவருக்கு வேறு எண்ணத்தை விதைக்கும் அபாயம் இருந்ததை உணர்ந்தவன்,
வேகமாய் அவள் அருகில் வந்தான்.
“ஏய்... என்ன ட்ரெஸ் பண்ணி இருக்க. கன்றாவியா இருக்கு.’’ என்று அவள் காதில்
வார்த்தைகளை கடித்து துப்ப, தன்னால் முடிந்த மட்டும் அவனை முறைத்தவள், “கட்ட
தெரிஞ்ச ஒழுங்கா கட்ட மாட்டேனா..? நானே ஏதோ முடிஞ்ச அளவு சுத்தி இருக்கேன்.
முடிஞ்சா நீங்க கட்டி பாருங்க... புடவை கட்டுறது எவ்ளோ கஷ்டம்னு எப்போ தெரியும்.’’
என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
அதற்குள் மகிழனின் தாய், “மகிழ்..! என்னப்பா அங்கயே மருமகளை நிக்க வச்சி
பேசிட்டு இருக்க. உள்ள கூட்டிட்டு வா.’’ என குரல் கொடுக்க வேறு வழியில்லாமல்,
“வந்து தொலை..’’ என்று அவளை நோக்கி குரல் கொடுத்துவிட்டு முன்னால் நடந்தான்.
சற்றே புரண்ட புடவையை வலது கரத்தால் உயர்த்திப் பிடித்தவள், கொஞ்சம்
பொறுமையாகவே மகிழனை பின் தொடர்ந்தாள்.
சூழ்ந்து இருந்த அவனின் சொந்தங்கள் அனைவரின் முகத்திலும் ஒரு விசமப் புன்னகை
உதயமாக துவங்க, மகிழன் பற்களை அழுந்தக் கடித்து தன் கோபத்தை மட்டுப்படுத்திக்
கொண்டிருந்தான்.
பூங்கொடியின் வீட்டு சார்பில் வந்திருந்த அவளின் மூன்று அண்ணன்களும், இரண்டு
மாமன்களும், அவர்களின் மனைவிமார்களும் வெகு இயல்பாய் நின்றுக் கொண்டிருந்தனர்.
ஆரத்தி படலம் முடிந்து, பெண்ணும் மாப்பிள்ளையும், வீட்டிற்குள் நுழைந்ததும்,
யாரோ ஒரு உறவினர், “என்னடா நம்ம ரேஸ் பையன் மகிழனோட வண்டி லேட்டா வருதேன்னு
பாத்தேன். கல்யாணப் பொண்ணு பெரிய ஸ்பீட் ப்ரேக் போல..’’ என கிண்டலடிக்க, கலகல
சிரிப்பொலி அந்த கூடம் முழுக்க பரவியது.
‘அடியே... எல்லாம் உன்னால தாண்டி..’ என்று மகிழன் பூங்கொடியை உறுத்து விழிக்க,
அவளோ, ‘ஒழுங்கா புடவை கட்ட விடாம நொய்
நொய்ன்னு கதவை தட்டிட்டு... மூஞ்சும் முகரையும்..’ என மனதிற்குள் அவனை தீய்த்து
எடுத்தபடி தானும் அவனை முறைக்க தொடங்கினாள்.
பார்வைகள் கனல் மூட்ட, வெளியே மேகமும் குளிர் மூட்டிக் கொண்டிருந்தது.
மழை பொழியும்.

Super mam
ReplyDeletethank you so much for your story, its good.
ReplyDelete