mazhai - 3


மழை- 3


மகிழன் எண்ணியபடி பூங்கொடியின் வரவு அவன் வாழ்வினுள் பெரிதாய் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. திருமணம் முடிந்து அன்றைய இரவு நேர்ந்த தனிமையில், அவன் பேச எண்ணி உருப் போட்டிருந்த வசனங்களை பூங்கொடி இம்மியளவும் பிசகாமல் பேசினாள்.

“இந்த கல்யாணமே என் வாழ்கையில பெரிய ஆக்சிடன்ட். இன்னும் கொஞ்ச நாள் என்னை ஜஸ்ட் உங்க ரூம்மேட்டா நினைச்சி சகிச்சிக்கோங்க. என் படிப்பு முடிஞ்சதும் நானே உங்க வாழ்கையில இருந்து விலகி போயிடுவேன்.’’

அவள் பேசிய வசனங்களை செவி மடுத்தவன், “இவ என்ன சினிமா ஹீரோயின் மாதிரி டயலாக் பேசிட்டு இருக்கா. மேரேஜ் லைப்ல ஒன்ஸ் என்டர் ஆயிட்டு மறுபடி விலகி போறது அவ்ளோ ஈசியா என்ன..?’’ என  மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

ஆனால் பூங்கொடி அப்படி பேசி இருக்காவிட்டால், தானே இந்த வகையறா வசனங்களை தான் மனப்பாடம் செய்து வைத்திருந்தோம் என்பதை வசதியாய் மறந்து போனான்.

சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன், என்பதை போல பூங்கொடி இரவு உடையை மாற்றி வந்து அந்தப் பெரிய படுக்கையின் ஒருபுறம் படுத்து நிர்மலமாய் உறங்கிவிட, அன்றைய இரவில், மகிழன் தான் வெகு நேரம் விழித்துக் கிடந்தான்.

மறு வீட்டு சீராடல், குல தெய்வ வழிபாடு என்று தொடர்ந்து நடந்த சமபர்தாயங்களில் பூங்கொடி இயல்பாய் நடமாட, மகிழனும் சாதாரணமாய் ஓரிரு வாரத்தைகள் அவளோடு பேசிக் பழகினான். அதைக் கண்டு, மகிழனின் தாயாரும், பூங்கொடியின் மொத்தக் குடும்பமும் அக மகிழ்ந்து போனது.

ஐந்து நாட்கள் பெங்களூர் வாசம் முடிந்த பின்பு, மகிழன் தன்னுடைய தற்காலிக வசிப்பிடமான கோயம்பத்தூருக்கு கிளம்ப, தம்பதிகள் இருவரின் தனிக் குடித்தனம் ஆரம்பமாகியது.

பூங்கொடி தன் இரண்டாம் வருட, கணிப்பொறி அறிவியில் இளங்கலை பட்டப்படிப்பை கோவையின் பிரபல கல்லூரி ஒன்றில் துவங்கி இருந்தாள்.

மகிழனின் அடுக்குமாடிக் குடியிருப்பு மூன்று அறைகள் கொண்டது. ஒன்றை அவன் தன் உபயோகத்திற்கும், மற்றொன்றை அலுவல் அறையாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்க, வெட்டியாய் கிடந்த மூன்றாம் அறையை பூங்கொடி தன் உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டிருந்தாள்.

சமைக்க, வீட்டை பராமரிக்க ஏற்கனவே மகிழன் வேலை ஆட்களை நியமித்து இருக்க, மகிழனும், பூங்கொடியும் ஒரே வீட்டில் இருந்தும், இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பே அரிதாய் இருந்தது.

அன்றைக்கும் மகிழன் தன்னுடைய நூல் தொழிற்சாலையில், புதிய நுகர்வோர் பட்டியலை கணினியில் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அதுசமயம் அவன் அலைபேசி அழைக்க, புதிய எண்ணாய் இருக்கவும், செய்துக் கொண்டிருந்த வேலை தடைபடும் எரிச்சலில், சற்றே காட்டத்தோடு, காதில் பொருத்தி, “ஹெலோ’’ என்றான்.

“சார்... நாங்க பி.எஸ்.ஜி காலேஜ்ல இருந்து பேசுறோம். நீங்க மிஸ்டர் மகிழன் தானே. உங்க வைப் பூங்கொடிக்கு கொஞ்சம் பிரச்சனை. கொஞ்சம் சீக்கிரம் உடனே கிளம்பி இங்க வாங்க.’’ என சொல்ல, முதலில் மகிழனுக்கு ஒன்றுமே புத்தியில் உரைக்கவில்லை.

மறுபடி அலைபேசிக் குரல், இவனிடமிருந்து பதிலின்றி போகவும், “சார்.. நீங்க பூங்கொடி ஹஸ்பன்ட் தானே..’’ என்று மீண்டும் ஒரு முறை அழுத்திக் கேட்கவும், சுய உணர்வை எட்டியவன், “யா... எஸ்...ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ்.. நான் உடனே கிளம்பி வறேன்.’’ என்று சொன்னவன், மேஜை மேலிருந்த தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அலுவக படிகளில் இறங்கியபடியே, தன் அலைபேசி மூலம், உதவியாளரை அழைத்தவன், “கோபி.. நீங்க கொடுத்த கொட்டேசன் பார்ம்ஸ் எல்லாம் சைன் பண்ணி வச்சிட்டேன். எடுத்துக்கோங்க. அப்புறம் நான் கொஞ்சம் வெளிய போறேன். போயிட்டு வந்து நியூ ப்ரைஸ் லிஸ்ட் சைன் பண்ணி தரேன்.’’ என்றவன், தன் புகாட்டி காரை அடைந்ததும், அலைபேசியை அணைத்துவிட்டு, காரை இயக்கி கல்லூரி நோக்கி விரட்டினான்.

கல்லூரியை அடைந்தவன், நிர்வாக அலுவலகம் செல்லும் தேவை ஏற்படாமல், வளாகத்தின் முன்புறமிருந்த பரபரப்பு அவனை என்னவென்று கேள்வி கேட்க தூண்டியது.
பரபரப்பாய் அலைந்துக் கொண்டிருந்த மாணவனில் ஒருவனை நிறுத்தியவன், “என்ன பிரச்சனைப்பா இங்க..?’’ என கேள்வி கேட்க, எதற்கோ வேகமாய் சென்றுக் கொண்டிருந்தவன், “உள்ளப் போய் பாருங்க சார்... உங்களுக்கே புரியும்.’’ என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

பெரும்பாலான மாணவர்கள் மைதானனம் நோக்கி நடந்துக் கொண்டிருக்க, தானும் உள் நோக்கி நடந்தான்.

கல்லூரி மைதானத்தில் இருந்த பெரிய மரம் ஒன்றின் கீழ், கூட்டம் கூடி இருக்க, என்னவாக இருக்கும் என்று சிந்தித்தவன், கூட்டத்தை விளக்கி விட்டு, உள்சென்று கண்ட காட்சியில், முதலில் அவனுள் தோன்றிய உணர்வு ஹாஸ்யமே.

அந்த பெரிய மரத்தின் உச்சி கிளை ஒன்றில் பூங்கொடி குரங்கு குட்டியை போல இறுக பற்றி தொற்றிக் கொண்டிருந்தாள். உள்ளே சிரிப்பு பொங்கிய அதே நொடி, அங்கிருந்து கீழே விழுந்தால் எலும்பு முறிவு நிச்சயம் என்று அறிவு அறிவிக்க, மெல்ல அவனுள் பதட்டம் சூழ துவங்கியது.

அங்கே வயதில் மூத்தவராய் இருந்த ஆசிரியர் ஒருவரிடம் தன்னை சுய அறிமுகம் செய்துக் கொண்டவன், “சார்... நான் தான் பூங்கொடி ஹஸ்பன்ட். எப்படி சார். எப்படி சார் இவ்ளோ ஹைட் இருக்க மரத்துல ஏறினா?’’ என்று  கேள்வி கேட்க துவங்க,

“சார்...என்ன சார் சின்ன பிள்ளை தனமா கேள்வி கேக்குறீங்க..? அவ்ளோ ஹைட்ல ஸ்பைடர் மேனா வந்து உங்க வைப்பை ஏத்தி விட முடியும். அவங்களா தான் ஏறி இருக்கணும். நாங்களே பையர் சர்வீசுக்கு போன் பண்ணிட்டு வண்டியை இன்னும் காணோமேன்னு டென்சன்ல நின்னுட்டு இருக்கோம். நீங்க வேற இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.’’ என எரிச்சலாய் மொழிய, மகிழன் அடுத்து என்ன பேசுவது எனப் புரியாமல் அமைதியாகினான்.

அதே நேரம், பலமான அலார சைரனை அலறவிட்டபடி, தீயணைப்பு வண்டி கல்லூரியின் மைதானத்திற்குள் நுழைந்தது.

வண்டியைக் கண்டதும், நன்றாக மேல் நோக்கி நிமிர்ந்து, கையை வாயின் மேல் குவித்து, “பூங்கொடி பயப்படாத, பயர் சேப்டி விகிகிள் வந்துருச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல நீ கீழ இறங்கி வந்துடலாம்.’’ என தைரியம் சொல்ல, அவ்வார்த்தை பூங்கொடியின் செவியில் ஏறியதோ என்பதை போல அவள் இறுக்கிய கிளையை அப்படியே கட்டிக் கொண்டிருந்தாள்.

தீயணைப்பு படை வீரர்கள் ஒன்றுடன் மற்றொரு ஏணியை இணைந்து அளவில் பெரிய ஏணியாய் மாற்றி, பூங்கொடி தொற்றிக் கொண்டிருந்த கொன்றை மரத்தை நெருங்கினர்.

சரியாய் பூங்கொடி இருந்த கிளைக்கு இரண்டடிக்கும் குறைவான உயரத்தில்,  அந்த ஏணியின் உயரம் இருந்தது.

கீழே சில வீரர்கள் ஏணியை பிடித்துக் கொள்ள, தீயணைப்பு படை வீரர் ஒருவர், மேலே ஏறி, ஏணியின் முனையை நெருங்கியதும், பூங்கொடியை மென்மையாய் அழைத்து, அவள் தொற்றிக் கொண்டிருந்த கிளையில் இருந்து, மெதுவாய் எக்கி அவள் பாதங்களை கீழிருந்த ஏணியில் வைக்க சொன்னார்.

பூங்கொடி மெதுவாய் அசையவுமே, அவள் அமர்ந்திருந்த கிளை, முறிவிற்கு உண்டான ஓசையை வெளிப்படுத்தவும், பூங்கொடி அப்படியே மடங்கி கண்களை இறுக மூடி மறுபடி அக்கிளையோடு தொற்றிக் கொண்டாள்.

கீழே இருப்பவர்கள், “ஓ...’’ என அதிர்சிக் குரலை வெளிப்படுத்த அக்காட்சியை  பார்த்துக் கொண்டிருந்த, மகிழனின் இதயமோ தொண்டைக் குழியில் வந்து துடித்தது.

அவள் அமர்ந்திருந்த கிளைக்கு நேரே சில மாணவர்கள் குத்து சண்டைக்கு பயன்படுத்தும், மெத்தை விரிப்புகளை கொண்டு வந்து பரப்ப தொடங்கி இருந்தனர்.

மகிழனுக்கு அதற்கு மேல், அமைதியாய் வேடிக்கைப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த தீயணைப்பு படை வீரர், தொடர்ந்து பூங்கொடியிடம் பேசிக் கொண்டிருக்க, மகிழன் கீழே ஏணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த வீரர்களை நெருங்கி, தான் மேலே ஏற அனுமதி வேண்டி, மள மளவென மேலேறியவன் ஏணியின் உச்சியை அடைந்தான்.

இவனுக்கு சற்று முன்னே நின்றுக் கொண்டிருந்த வீரர், இவன் சென்று தான் முயல்வதாய் சொல்லவும் சற்றே  இடைவெளிவிட்டு தான் கீழே இறங்கி நின்றார்.

முழுதாய் ஏணியின் முதல் படியில் ஏறி நின்றவன், கைகள் இரண்டையும், மேல் நோக்கி உயர்த்தி, “பூங்கொடி... கண்ணை முழிச்சி பாரு. நீ உன் காலை கூட எடுத்து வைக்க வேண்டாம். அப்படியே அந்த கிளைய விட்டுட்டு என் மேல சாஞ்சிடு.’’ என்று உரத்து சொல்ல, செவிகளில் பாய்ந்த கணவனின் குரலில் பூங்கொடி வேகமாய் விழிகளை திறந்தாள்.
இத்தனை நேரம் இல்லாத பாதுகாப்பு உணர்வு நொடியில் அவளை சூழ, கிளையில் இருந்த கைகளைப் பிரித்தவள், மொத்தமாய் மகிழனின் மேல் சரிந்தாள்.

மகிழன் இரு கைகளையும் உயர்த்தி இருந்த போதும், பூங்கொடி அவன் மீது விழுந்த போது சற்றே பின்னால் வளைந்தவன், கால்களை  இறுக ஊன்றி மீண்டும் சமநிலையை அடைந்தான்.

கீழே இருந்தவர்கள், ஏதோ சர்கஸ் சாகச நிகழச்சி போல அந்த காட்சி தோன்ற, பூங்கொடி பத்திரமாய் மீண்ட நிம்மதியும் சேர, கைகளைத் தட்டி ஆரவார குரல் எழுப்பினர்.

கிளை முறிந்து கண் முன் மரண பயத்தை கண்டு மீண்டவள் ஆகையால், பூங்கொடி மகிழனின் கழுத்தில் கரத்தினை கோர்த்து அவனோடு அட்டையாய் ஒட்டிக் கொள்ள, மகிழன் மிகப் பொறுமையாய் கீழே இறங்க தொடங்கினான்.

கீழ் நோக்கி பாய்ந்திருந்த அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவளின் உள்ளுக்குள் மேல் நோக்கிய உணர்வொன்று மழையாய் பொழிந்து அவளை நனைத்துக் கொண்டிருந்தது.     

மழை பொழியும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Mazhai - 15 (Final ud)

mazhai - 12

enakenap peiyum mazhai