mazhai - 4


மழை- 4


பூங்கொடி அமைதியாய் நின்றுக் கொண்டிருந்தாள். பயத்தில் இன்னமும் அவள் உடல் வெட வெடத்துக் கொண்டிருந்தது, வெளிப்படையாய் தெரிந்து கொண்டிருந்தது.

அவள் துறை பேராசிரியர் முதல், முதல்வர் வரை ஆளாளுக்கு எப்படி எப்படியோ, “ஏன் மரத்துல ஏறின..?’’ என்ற ஒற்றை கேள்வியை வெவ்வேறு பாணியில் விசாரித்து பார்த்தும், பூங்கொடி தலை குனிந்த தன்  மௌனத்தையே பதிலாய் கொடுத்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல், அவர்களின் விசாரணையை பொறுக்க மாட்டாத மகிழன், “இனி இப்படி நடக்காம இருக்க நான் பொறுப்பு. அவ ஏற்கனவே ரொம்ப பயந்து போய் இருக்கா. ப்ளீஸ் உங்க என்கொயரீஸ் எல்லாத்தையும் நிறுத்துங்களேன்.’’ என சற்றே அழுத்தமான குரலில் உரைக்க பூங்கொடி பட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

இவனின் அழுத்த குரலில் சற்றே எரிச்சலடைந்த முதல்வர், “சார் இனி இப்படி நடக்கமா பாத்துகிறேன்னும்... அவங்க இப்படி செஞ்சதுக்கு ஒரு எக்ஸ்கியூஸ் லெட்டரும் எழுதி கொடுத்துட்டு கிளம்புங்க. இனி ஒரு டைம் உங்க வைப் காலேஜ் கேம்பஸ்ல இப்படி நடந்துகிட்டா கொஞ்சம் கூட யோசிக்காம டிசிய கொடுத்துடுவோம்.’’ என்று மொழிய, அப்போதைக்கு மகிழன் அவர் கேட்ட கடிதத்தை எழுதிக் கொடுத்து அவளை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அன்றைய இரவு உணவு நேரத்தில், பூங்கொடி மௌனமாய் உணவை உண்டு கொண்டிருக்க, அவளின் குனிந்த தலையை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், மயிலின் இறகைப் போன்ற மென்மையான குரலில், “ஏன் அவ்ளோ உயரத்துல ஏறின பூங்கொடி..?’’ என வினவினான்.

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் நொடியில் நீரால் நிரம்ப உண்மையில் மகிழன் நிரம்பவே பயந்து போனான்.

“பூங்கொடி... ரிலாக்ஸ்..... ரிலாக்ஸ்... நான் இனி எதுவும் கேக்க மாட்டேன். நீ சாப்பிடு. அழாத.. தப்பா எதுவும் கேட்டு இருந்தா சாரி..’’ அவன் பதட்டத்தில் சற்றே திக்கி திக்கி பேச, இம்முறை பூங்கொடி விழிகளை மூடிக் கொண்டு தேம்பி அழத் துவங்கி இருந்தாள்.

மகிழன் தன் இருக்கையில் இருந்து வேகமாய் எழுந்தவன், இரண்டே எட்டில் அவளை நெருங்கி நிற்க, பூங்கொடி சட்டென அவன் வயிற்றில் முகம் புதைத்தாள்.

உடனே பின் வாங்க முடியாத நிலையில், மகிழன் தன்னையும் மீறி அவள் தலையை தன் இடக்கரத்தால் கோதியபடி, “பூங்கொடி.. சொல்றேன் இல்ல.. அழாத. ரிலாக்ஸ்.... அதான் உனக்கு ஒன்னும் ஆகலைல...! இனி அப்படி மரத்து மேல எல்லாம் ஏறக் கூடாது சரியா..?’’

தலை கோதியபடியே அவன் ஆறுதலும் உரைக்கவும், அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், நீர் நிரம்பிய விழிகளோடே, “எல்லாம் என் தப்பு தான் மாமா..! வழக்கம் போல எங்க ப்ரேக் டைம்ல மரத்துல உயரமா கல்லை தூக்கி போட்டு பூவை விழ வைக்குற ஹை ஸ்டோன் கேம் விளையாடிட்டு இருந்தோமா..! நான் மேல தூக்கிப் போட்ட கல்லு காக்கா கூட்ல பட்டு கூடு லேசா சாஞ்சி அதுல இருந்து ஒரு குஞ்சி கீழ விழுந்துடுச்சி மாமா..!

ரொம்ப குட்டி காக்கா மாமா... ரொம்ப பாவம். என் பிரண்ட்ஸ் கொஞ்ச நேரம் உச் கொட்டிட்டு கிளாசுக்கு போயிட்டாங்க மாமா. என்னால அப்படி போக முடியல மாமா.

அதான் எல்லாரும் கிளாசுக்கு போனதும்... நான் என் ஷால்ல அந்த குஞ்சை பத்திரப்படுத்தி...மடமடன்னு மரத்து மேல ஏறி காக்கா கூட்ல குஞ்சை வச்சிட்டேன்.

ஏறும் போது.. மரம் ஏறுற பழக்கத்துல சாரசரன்னு ஏறிட்டேன். ஆனா இறங்குறப்ப ஒரு கிளை முறிஞ்ச மாதிரி சவுன்ட் கொடுக்கவும் ரொம்ப பயந்துட்டேன் மாமா..! அதான் அங்கயே படுத்துட்டேன்.

அந்த குஞ்சி காக்க கூட்ல வைக்கும் போது ரொம்ப சோந்து இருந்துச்சி மாமா..! மேல இருந்து கீழ விழுந்ததுல ரொம்ப அடிபட்டு இருக்குமோ..? அது செத்துப் போயிடுமா மாமா..?’’

உதடுகள் குற்ற உணர்ச்சியில் துடிக்க, அழுகையில் சிவந்த விழிகளோடு பூங்கொடி அப்படிக் கேட்கவும், அவள் முகத்தை தன் வயிற்ரோடு அழுந்தப் பதிந்துக் கொண்டவன், “அந்த காக்கா குஞ்சு நல்லா தான் இருக்கும் பூங்கொடி. நீ.. பீல் பண்ணாத...’’ என்று அவள் முதுகை வருடிக் கொடுக்க, பூங்கொடி கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பிற்கு திரும்பினாள்.

அன்றைய இரவு முழுக்க, “அந்த காக்கா குஞ்சு செத்துருமா மாமா..?’’ என்று கேட்ட பூங்கொடியே மகிழனின் மனத் திரையில் வந்து போய்க் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலை, வேக வேகமாய் பூங்கொடியின் அறைக் கதவை தட்டியவன், அவள் தூக்க கலக்கத்தோடு வெளியே வரவும், “பூங்கொடி சீக்கிரம் ட்ரெஸ் மாத்திட்டு வா. நாம வெளிய போறோம்.’’ என்று சொல்ல, பூங்கொடியும் இரண்டே நொடியில் தயாராகி வந்தாள்.

இரவில் இருத்த மனப்பாரம் சற்றே குறைந்து இருக்க, “எங்க போறோம்..?’’ என மகிழனை நோக்கி கேட்கவும் செய்தாள். இரவில் நொடிக்கு ஒரு முறை இருந்த ‘மாமா’ என்ற அழைப்பு தற்சமயம் விடை பெற்று இருக்க ஏனோ அந்த அழைப்பை மகிழனின் மனம் எதிர்பார்க்க தொடங்கி இருந்தது.

பூங்கொடியை பார்த்து மென்மையாய் புன்னகைத்தவன், “போனதும் நீயே தெரிஞ்சிக்க போற.’’ என்று பதிலுறுத்தான்.

அவனின் வாகனம் அவர்கள் கல்லூரி மைதானத்திற்குள் நுழையவும், பூங்கொடி, ‘இங்க எதுக்கு வந்து இருக்கோம்’ என்ற ஒரு குழம்பிய பார்வையை மகிழனை நோக்கி வீசினாள்.

ஆனால் மகிழன் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அவன் தன் போக்கில் பின் இருக்கையில் இருந்த ஏதேதோ உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் வெளியே வந்தவனின் கைகளில் குட்டி விமானம் ஒன்று இருக்க, அவனை ஆச்சர்யமாய் பார்த்த பூங்கொடி, “ஐய.. என்ன மாமா இது. சின்ன பிள்ளை மாதிரி பறக்குற ஹெலிகாப்டர் பொம்மை வச்சி விளையாட போறீங்களா..? இதுக்கு என்னை வேற காலங் காத்தால எழுப்பி கூட்டிட்டு வந்து இருக்கீங்க. வாங்க வீட்டுக்கு போகலாம். இன்னைக்கு எனக்கு மாடல் டெஸ்ட் வேற இருக்கு.’’ என்றுவிட்டு பூங்கொடி மீண்டும் காருக்குள் ஏற முயன்றாள்.

அவளின் செய்கையை பெரும் புன்னகையோடு ரசித்தவன், “ஹே... பூங்கொடி கொஞ்சம் வெயிட் பண்ணு. இது சாதாரண ஹெலிகாப்டர் பொம்மை இல்ல. ஹெலி கேம். இங்க வா. உனக்கு காட்றேன்.’’ என்றவன் அவள் மீண்டும் அவன் அருகில் வந்து நின்றதும், தன் கையில் இருந்த தொடுதிரை அலைபேசியின் கேமராவை இயக்கி அவள் கரத்தில் கொடுத்தான்.

அடுத்து அந்த குட்டி விமானத்தை ரிமோட் கொண்டு இயக்க அது மெல்ல மெல்ல கிளம்பி மேலே பறக்க துவங்கியது. அது மேலே செல்ல செல்ல, அதன் கேமரா கண்கள் படம் பிடிக்கும் காட்சிகள் அலைபேசியின் தொடு திரையில் விரிய துவங்கியது.

பூங்கொடி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த குட்டி விமானம், நேற்று அவள் தொங்கிக் கொண்டிருந்த மரத்தை நெருங்கியது. தன் கையில் இருந்த ரிமோட் கொண்டு மகிழன் அதன் திசையை சீர் செய்ய, அடுத்த சில மணித்துளிகளில் காகக்தின் கூடு அலைபேசியில் விரிந்தது.

நேற்றைக்கு குஞ்சை வைக்கும் போது மேலும் இரு குஞ்சுகள் கூட்டில் இருந்ததை பூங்கொடி ஏற்கனவே கண்டிருந்தாள். தற்சமயம் மூன்று குஞ்சுகளும் வெகு ஆரோக்கியமாய் கிள்ளை வாய் திறந்து கரைந்து கொண்டிருக்க, அந்த காட்சியை அலைபேசியில் கண்ட பூங்கொடியின் விழிகளில் மகிழ்ச்சியின் உவர் நீர்.

“என்ன மேடம் உன் பிரண்ட்ஸ்லாம் நல்லா இருக்காங்களா....?’’ தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில் படக்கென நிமிர்ந்தவள், சற்றும் தயங்காமல், தனக்கு அண்மையில் இருந்தவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள், அவள் கன்னத்தில் வடித்த கண்ணீரின் குளுமை மகிழனின் கன்னம் தீண்ட.

பூங்கொடியின் செய்கையில் அதிர்ந்த மகிழன் தன் கையிலிருந்த ரிமோட்டை தவற விட, உயரத்தில் இருந்த விமானம் குட்டிகரணம் அடித்து மெல்ல மெல்ல தரை இறங்கத் துவங்கி இருந்தது மகிழனின் மனம் போல.

மழை பொழியும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

Mazhai - 15 (Final ud)

mazhai - 12

enakenap peiyum mazhai