mazhai - 5
மழை – 5
‘இவள் புரியா புதினமோ..?
தமிழின் மரபுக் கவிதையோ..?
குமரியின் உருவில்
குழந்தை போல துள்ளும் அழகியோ..!
யார் இவளோ..! என் தேவதையோ ..!’
தொலைக்காட்சியில் பாடல் அலறிக் கொண்டிருக்க, வீட்டில் மூலை, மூலைக்கு
சிதறியிருந்த துணிகளை சேகரித்துக் கொண்டிருந்தான் மகிழன்.
பாடல் வரிகள் மகிழனின் இதழ்களில் புன்முறுவலை பூக்க செய்தது. ‘பூங்கொடியின்
செய்கைகளும் இப்படித்தான் இருக்கும்.’ மனதிற்குள் அந்த எண்ணம் இழைந்தோட, அவளின்
ஜுகுனு எங்கிருந்தோ பறந்து வந்து மகிழனின் தோள் மேல் தொற்றியது.
“ஜுகுனு... கீழ இறங்கு எனக்கு வேலை இருக்கு. கமான்.. கமான் பாய்..’’ என்றவன்,
சாப்பாட்டு மேஜையில் இருந்த நெகிழியில் இருந்து சிறிதளவு கம்பை எடுத்து தரையில்
போட, அந்த சண்டை சேவல் மெல்ல அவன் மேலிருந்து கீழே இறங்கியது.
என்றைக்கு பூங்கொடி மகிழனின் செய்கையில் நெகிழ்ந்து அவன் கன்னத்தில்
முத்தமிட்டளோ, அன்றிலிருந்து மகிழனோடான அவளின் உறவு வேறு ஒரு பரிமாணத்தை எட்டி
இருந்தது.
அதற்கு முன்பு வரை தான் இருந்த இடம் அதிராமல் இருந்த பூங்கொடி அடுத்தடுத்து
வந்த நாட்களில், ஆர்ப்பாட்டங்களின் நாயகியாகிப் போனாள்.
முதலில் அவள் வீட்டில் இருந்த அவளுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் அவளின் கடைசி
அண்ணனை கொண்டு வந்து தர சொன்னாள். அவளின் அந்த வேண்டுதலில் செந்தூரன் எவ்வளவு
மகிழ்ந்திருப்பான் என்பதை அன்றைக்கு அவனின் செய்கைகள் மூலம் அறிந்து கொண்டான்
மகிழன்.
குட்டி, குட்டி போன்சாய் மரம், வித விதமான பூச்செடிகள், பெரிய மீன் தொட்டியில்
நீந்தும் வர்ண மீன்கள், எம்.ஆர்.எப் ஜீனியஸ் கிரிக்கெட்பேட், அதோடு கூடவே இந்த
ஜுகுனு சண்டை சேவல்.
செந்தூரன் நொடிக்கு ஒரு முறை, ‘மாப்பிள்ளை.. மாப்பிள்ளை..’ என்று மகிழனிடம்
உருகிக் கொண்டே இருந்தான். இறுதியில் விடை பெற்று செல்லும் முன்,
“உங்களுக்கு சீர் அனுப்பும் போது கூட மனசுல இவ்ளளவு நிம்மதி இல்ல. கொடி போன்
போட்டு அவளுக்கு பிடிச்சதை எல்லாம் இங்க கொண்டு வந்து கொடுக்க சொல்லவும் தான்
மனசுக்கு நிம்மதியா இருக்கு மாப்பிள்ளை. கொஞ்சம் விளையாட்டு தனமா இருப்பா. ஆனா
ரொம்ப பாசக்காரி. பாத்துகோங்க.’’ ஏறக்குறைய சற்றே கரகரத்த குரலில் செந்தூரன்
விடைபெற, லகரங்களில் சம்பளம் பெரும் ஒருவன், இறைஞ்சி நிற்பதை போன்ற தோற்றம் ஏனோ
மகிழனுக்கு ஆச்சர்யத்தை தோற்றுவித்தது.
தன்னைப் போல சரி என்று தலையை கூட ஆட்டியும் வைத்தான். ஆனால் அதற்கு பின் வந்த
நாட்களில் தான் மகிழனின் பாடு திண்டாட்டமானது.
எம்.ஆர்.எப் பேட்டிற்கு சொந்தக்காரியான பூங்கொடிக்கு எடுத்த எடுப்பிலேயே,
அவர்கள் அப்பார்ட்மென்ட் சிறுசுகளின் கிரிகெட் பட்டறையில் கேப்டன் பதவி கிடைக்க,
அவள் பறக்கவிட்ட பந்துகள் எல்லாம், ஏதோ ஒரு வீட்டின் கண்ணாடி ஜன்னலை பதம் பார்த்து
வைத்தது.
அதோடு, ஜுகுனு வேறு தன் இஷ்டம் போல, பக்கத்து அப்பார்ட்மென்ட் வாயிலை எல்லாம்
தன் கழிப்பறையாக உபயோகிக்க துவங்கியது.
மாதாந்திர அப்பார்ட்மென்ட் மீட்டிங்கில், அதுவரை C13 என்ற வீட்டில் யாரோ
இருக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்த அப்பார்ட்மென்ட்
வாசிகள், அன்றைக்கு பூங்கொடியையும், அவளின் மட்டைப் பந்தையும், அவள் வளர்க்கும்
சேவலின் கைங்கர்யத்தையும் பெரிய புகார் பட்டியலாய் வாசிக்க மகிழனுக்கு மூச்சு
திணறிவிட்டது.
ஒரு வழியாய் அவர்கள் அப்பார்ட்மென்ட் பயன்பாட்டிற்கென புதிதாய் உருவாகப்
போகும் விளையாட்டு மைதானத்திற்கு அவன் கணிசமான தொகையை நன்கொடையாய் தருவதாய்
சொல்லியதும் தான் அப்பார்ட்மென்ட் செக்ரட்ரி இவனைப் பார்த்து சிரிக்கவே செய்தார்.
‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று அன்றைக்கு அங்கிருந்து ஓடி வந்தவன், முதல்
வேலையாய் பூங்கொடியின் விளையாட்டு திடலை மாற்றி அமைத்தான்.
அதோடு ஜுகுனுவிற்கு தோதான பெரிய கூண்டு ஒன்றை அவர்கள் பால்கனியில் அமைத்தான்.
அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டும் அதனை திறந்து விட்டு
வீட்டிற்குள்ளேயே உலா வர அனுமதிப்பான்.
இவன் முதற்கட்ட பிரச்சனைகளை சரி செய்ய பூங்கொடி அவனுக்கு அடுத்தகட்ட சத்ய
சோதனைகளுக்கு வித்திட்டாள்.
அலுவலில் இருந்து அவன் வீடு திரும்பும் நேரம், “மாமா... ஜுகுனுவுக்கு கம்பு
வாங்கிட்டு வாங்க..!’’ என செய்தி அனுப்பி வைப்பாள். அந்த நேரத்தில், ஏதேனும் ஒரு
முட்டு சந்து சிறு தானியக் கடையை தேடி ஓடுவான்.
ஞாயிறு மாலைகளில் சற்றே அசந்து இருக்கலாம், என்று அவன் எண்ணும் தருணத்தில்,
“மாமா.. வாங்க மீன் தொட்டி கழுவலாம்.’’ என்று அழைப்பாள்.
அழைப்பு மட்டுமே பன்மையில் இருக்கும். மற்றபடி, மீன் தொட்டியில் படிந்த உப்பை
பிளேடை கொண்டு சுரண்டுவது தொடங்கி, செயற்கை கடல் அலங்காரப் பொருட்களை அலசி, வர்ண
கற்களை அலசி என்று அத்தனையும் சுத்தம் செய்வது அவனாகத் தான் இருக்கும்.
இதெல்லாம் போதாது என்று, ‘வீட்ல நாம ரெண்டு பேர் தானே மாமா இருக்கோம். நமக்கு
எதுக்கு வேலைக்காரங்க. நம்ம வேலை எல்லாம் நாமே செஞ்சிகிட்டா என்ன..?’’ என்று
கேட்டு மகிழனை கதி கலங்க வைத்தாள்.
இவளின் சேர்ந்து செய்யும் விதி அறிந்தவன் ஆகையால், “அதெல்லாம் யாரையும்
நிறுத்த வேண்டாம் பூங்கொடி. நாம நிறுத்திட்டா பவம் அடுத்த வேலை கிடைக்கிற
வரைக்கும் அவங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டி வரும். அதோட நீயும் இப்ப படிச்சிட்டு
இருக்க. கொஞ்ச நாள் அமைதியா இரு.’’ என்று அரட்டி அவளை அமைதிபடுத்தினான்.
ஆனாலும் பூங்கொடி அடங்குபவளாய் இல்லை. ஞாயிறு மதியங்களில் சமையல் செய்கிறேன்
பேர்வழி என்று சமையலறையை இரண்டாக்கி வைப்பாள். ‘நான் சமைச்சேன்ல இப்போ கிச்சனை
நீங்க கிளீன் பண்ணுங்க.’ என்று அவனை விழி பிதுங்க வைப்பாள்.
அதோடு இவளின் சாகசங்கள் முடியாது. எதிர் வீட்டு மாமி வற்றல் செய்து மொட்டை
மாடியில் காயவைக்க, இவர்கள் மொட்டை மாடியில் இருந்து எகிறி குதித்து, அதை கொஞ்சம்
லவட்டிக் கொண்டு வருவாள்.
ஒருநாள் இரவு உணவில் பொறித்த வற்றலை மகிழன் உண்டு கொண்டிருக்க, “டேஸ்ட்
சூப்பரா இருக்கு இல்ல மாம்ஸ். எதிர் வீட்டு அப்பார்ட்மென்ட் மாடியில இருந்து நான்
தான் சுட்டுட்டு வந்தேன்.’’ என்று பெருமையாய் சொல்ல, அந்த வற்றல் அவன்
தொண்டையிலேயே சிக்கியது.
‘அடியே’ என்று மனதிற்குள் அலறியவன், அடுத்த நாள் ஐயங்கார் ஸ்பெஷல் வடாகத்தை
இரண்டு கிலோ வாங்கி வந்து வீட்டில் நிரப்பி வைத்தான்.
இப்படி மகிழன் எப்படி முட்டுக் கொடுத்தாலும், பட்டி தாண்டும் ஆட்டுக்
குட்டியாய் அவளின் அலப்பறைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றது.
காலையில் கண் விழித்தாள், கல்லூரிக்கு கிளம்பும் நொடி வரை, “மாம்ஸ்.... மாம்ஸ்..’
என்று அவனை படுத்தி எடுப்பாள். அவனும் குழந்தையின் சுவடு தொடரும் தாயாய் அவளின்
தேவைகள் தீர்ப்பான்.
அன்றும் அப்படித்தான், பூங்கொடி வீட்டையே போர்களமாய் மாற்றிப் போட்டு
கல்லூரிக்கு கிளம்பியிருக்க, மகிழன் பொறுமையாய் வீட்டை ஒழுங்குபடுத்திக்
கொண்டிருந்தான்.
அதே நேரம் வீட்டு வேலை செய்யும் பெண்மணி, உள்ளே நுழைந்தார். “சார்... விடுங்க
சார்..! நான் செய்றேன்..’’ என்று அவர் முன்வர, “இல்ல இதெல்லாம் நான் செஞ்சிடுறேன்.
நீங்க போயி மத்த வேலையை பாருங்க.’’ என்று அனுப்பிவிட்டு கையில் அள்ளிய துணிகளுடன்
அழுக்கு கூடையை நோக்கி நடந்தான்.
அவள் துவட்டி வீசிய துண்டில் வீசிய அவள் மணம், உள் நுழைந்து விசிறடித்தது அவன்
மனம்.
Super mam
ReplyDelete