mazhai -7
மழை – 7
வீட்டிற்கு போகவே மகிழனுக்கு வெறுப்பாக இருந்தது. இந்த மூன்று வருடங்களில்
அறியாத தனிமை, இந்த மூன்று மாதப் பழக்கத்தில் ஏற்பட்ட நெருக்கத்தில் முகிழ்க்கும்
என்று அவன் சற்றும் யோசித்துப் பார்க்கவில்லை.
முன்னைப் போலவே வீடு ஆள் அரவமற்ற அமைதியை தத்தெடுத்து இருந்தது. அவ்வப்போது ஜுகுனுவின்,
‘கக்.. கக்..’ ஒலியும், கொக்கரிப்பும் மட்டுமே உயிருள்ள ஜீவனின் ஒலியாக இருந்தது.
பூங்கொடி வழக்கம் போல தன் கல்லூரிப் பேருந்தில் கல்லூரிக்கு சென்று திரும்பிக்
கொண்டிருந்தாள். விடுமுறை நாட்களில், அவளின் அறைக்கதவு அடைந்தே தான் கிடந்தது.
இத்தோடு பூங்கொடி மகிழனிடம் முகம் கொடுத்துப் பேசி ஒரு வராம் ஓடி இருந்தது. என்ன தான் மகிழன்
பூங்கொடியிடம் பேசுவதை நிறுத்தி இருந்தாலும், அவள் கல்லூரி சென்று வரும் நேரத்தை
எல்லாம் அவன் கவனித்தபடி தான் இருந்தான்.
என்னவோ அவளைப் பார்வையால் தொடர்வதே அவனுக்கு ஒரு ஆறுதலாய் இருந்தது. மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வில் இருந்த அத்தனை கொண்டாட்டங்களையும், அவள் ஒருத்தி
மீட்டு தந்த உணர்வு அவனுக்குள்.
இவர்களின் மௌனப் போராட்டம் மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்க, பூங்கொடி கல்லூரி
முடிந்து வீட்டிற்கு வரும் நேரம் மெல்ல மெல்ல தாமதமாக துவங்கியது.
முதலில் மகிழன் கல்லூரியில் ஏதேனும் சிறப்பு வகுப்புகள் இருக்கும் என்று
எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் இவள் வகுப்பில் பயிலும் பக்கத்து வீட்டுப் பெண்
சரியான நேரத்திற்கு வீடு திரும்புவதைக் கண்டவனின் உள்ளம் குழம்பி தவிக்கலாயிற்று.
மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தவன், வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் மூலம்,
அன்றைக்கும் பூங்கொடி சரியான நேரத்திற்கு வீடு திரும்பவில்லை என்றதை அறிந்ததும்,
அவனுக்கு அலுவலகத்தில் இருப்புக் கொள்ள முடியாது போயிற்று.
சற்று நேரம் அமைதியாய் இருக்கையில் கண் மூடி அமர்ந்தவன், சில நிமிடங்கள்
கழிந்ததும், தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தான்.
அங்கே இருந்த சில மாணவர்களிடம் விசாரிக்க, அவர்களோ, நடக்கவிருக்கும் மாநில
அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சியிகளில்
ஈடுபட்டு இருப்பதாய் தெரிவிக்க, மகிழன் விளையாட்டு திடலை நோக்கி நடக்க
துவங்கினான்.
ஆனால் அங்கு எங்கு தேடியும் பூங்கொடி மகிழனின் கண்களுக்கு தட்டுப்படவே இல்லை.
அவன் ஏமாற்றத்தோடு திரும்பி நடக்க, “சார்.. நீங்க பூங்கொடி ஹஸ்பன்ட் தானே..?’’
என்ற குரல் அவன் நடையை தடுத்து நிறுத்தியது.
மகிழன் திரும்பிப் பார்க்க அங்கே கல்லூரி நங்கை ஒருத்தி நின்றுக்
கொண்டிருந்தாள். இவன் ‘ஆம்’ என்பதைப் போல தலை அசைக்க, “சார்.. பூங்கொடி ஸ்விம்மிங்
பூல்ல ப்ராக்டீஸ்ல இருக்கா.... நேரா போனா லெப்ட் கட் ஸ்விம் பூல். வழக்கமா
யாரையும் உள்ள அலவ் பண்ண மாட்டங்க. நீங்க காம்பவுண்ட் கேட்டுக்கு வெளிய அட்டண்டர்ஸ்
இருப்பாங்க. அவங்ககிட்ட சொன்னா அவங்க பூங்கொடிய கூப்பிடுவாங்க.’’ என்று மொழிய,
அவளின் வழிகாட்டுதலுக்க்கு நன்றியுரைத்தவன், நீச்சல் குளம் நோக்கி நடக்கத்
துவங்கினான்.
நீச்சல் குளத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு இருந்த போதும், அது மூன்றடி
உயரத்தில் ஒப்புக்கே நீச்சல் குளத்தை மறைத்து இருந்தது. மற்றபடி வெளியே நின்றுப்
பார்த்தாலே உள்ளே நடக்கும் காட்சிகள் கண்களுக்கு சிக்கின.
மகிழன் முதலில் சாதரணமாய் நீச்சல் குளத்தை பார்வையால் அளந்தான். முதல்
அலசலிலேயே கருஞ்சிவப்பு நிற்றதில் தேவையான அளவு உடலை மறைத்திருந்த நீச்சல் உடையை
அணிந்திருந்த பூங்கொடியை அவன் விழிகள் அடையாளம் கண்டு கொண்டது.
ஆனால் அதற்கடுத்து நடந்த நிகழ்வுகள் அவன் விழிகளுக்கு உவப்பாய் இல்லை. நீச்சல்
பயிற்றுனர், ஆழ் சுவாச பயிற்சி கொடுக்க அவள் தலையை முழுதும் நீருக்குள் இருக்கும்படி
அமிழ்த்திக் கொண்டிருந்தார்.
பூங்கொடியின் கால்கள் நீருக்குள் இருந்த அவரின் இடையை பின்னிருந்து
பின்னியிருக்க, அவரின் கரங்கள், அவளின் சமநிலைப் பேண அவளின் இடையின் மீதிருந்தது.
மகிழனுக்கு நன்றாக தெரியும். இதுவும் நீச்சல் பயிற்சியில் ஒரு நிலை தான் என்று.
ஆனாலும் உள்ளுக்குள் சுறு சுறுவென்று ஏறும் உணர்வை அவனால் என்ன முயன்றும் அடக்க
முடியவில்லை.
நேராய் வெளியே நின்றுக் கொண்டிருந்த பாதுகாவலரை அணுகியவன், “மிசஸ் பூங்கொடி
மகிழனை கூட்டிட்டு போக வந்து இருக்கேன். கொஞ்சம் அவசரம். வர சொல்லுங்க
ப்ளீஸ்..!’’ உள்ளுக்குள் பொங்கிய கடுப்பை
,வெளியே காட்டாது, தன்மையாய் வேண்ட, அடுத்த பத்தாம் நிமிடம் உடைமாற்றிய பூங்கொடி
வெளியே வந்திருந்தாள்.
நெடு நேரம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததால், சருமம் சற்றே வெளுத்துப்
போயிருந்தது. வேகமாய் மகிழனை நெருங்கியவள்,
“யாருக்கு என்ன ஆச்சு..? ஏதோ எமர்ஜென்சின்னு சொன்னீங்கன்னு செக்யூரிட்டி
சொன்னார். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்க தானே? அப்பா.. அண்ணா... நான்
கேட்டுகிட்டே இருக்கேன். என்ன யோசிச்சிட்டு நிக்குறீங்க நீங்க..?’’ பூங்கொடி சற்றே
தன் குரல் உயர்த்தவும், தன்னை மீட்டுக் கொண்டவன், “வீட்டுக்கு வா. பேசிக்கலாம்.’’
என்றுவிட்டு கொஞ்சம் வேகமாய் முன்னோக்கி நடக்கத் துவங்கினான்.
பூங்கொடிக்கு இன்னமும் படபடப்பு அடங்கவில்லை. மகிழன் வண்டியை உயிர்பித்ததும்
மீண்டும் தன் கேள்விக்கனையை துவக்கினாள்.
மகிழனோ ஒரே பதிலாய், “வீட்டுக்கு போயி பேசிக்கலாம்னு சொன்னேன்.’’ என்று
அழுத்தமாக உரைக்க, அதற்கு மேல் பூங்கொடியும் எதையும் கேட்கவில்லை. பதட்டத்தில்
நகம் கடித்தபடி பயணிக்க துவங்கினாள்.
வீட்டை அடைந்ததும், அவன் காலணிகளை அகற்ற கூட நேரம் கொடுக்காமல், பூங்கொடி,
“என்ன விஷயம்..?’’ என்று வினவ, மகிழனோ, பொறுமையாய் காலணிகளை கழற்றி விட்டு, “ரொம்ப
டயர்டா இருக்கு பூங்கொடி. ஒரே ஒரு கப் காபி போட்டு கொண்டு வாயேன். உன்னோட கிட்சன்
அட்வன்சர்ஸ் பாத்தும் நிறைய நாள் ஆன மாதிரி ஒரு பீல்.... சோ.. உன் கையால ஒரு கப்
காபி ப்ளீஸ்...!’’ என்று மிக மென்மையாய் வேண்ட, காபியை கொடுக்காமல் அவன் எதையும்
உரைக்கப் போவதில்லை என்று உணர்ந்தவள், அவனை நன்றாக முறைத்து விட்டே சமையலறை நோக்கி
நடந்தாள்.
அவள் தட் தட் என்று தரையை உதைத்து நடக்க, அவளின் கோபம் கண்டு மகிழனின்
இதழ்களில் புன்னகை கூட மலர்ந்தது.
இரண்டே நிமிடங்களில் பூங்கொடி காபியுடன் வெளிப்பட, அது வாயில் வைக்க விளங்காத
சுவையுடன் தான் இருக்கும் என்பதை அறிந்தும், அதை கையில் வாங்கிய மகிழன் ரசித்து,
ருசித்து மிடறு மிடறாய் பருகினான்.
காபியின் சுவையில் மகிழனின் முகம் அஷ்டகோணலாய் மாறும் என்று எதிர்பார்த்த,
பூங்கொடியின் முகம் தான் எதிர்பார்ப்பு வீணான ஏமாற்றத்தில் சுருங்கியது.
காபியை குடித்து முடித்து கோப்பையை அருகிருந்த டீபாயில் வைத்தவன், மெதுவாய்
நிமிர்ந்து, “நாளையில இருந்து நீ ஸ்விம்மிங்கு கோச்சிங் கிளாஸ்லாம் அட்டன் பண்ண
வேண்டாம். காலேஜ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடு. நான் உனக்கு...’’
அதற்கு மேல் திடீரென மகிழனால் பேச முடியாது போயிற்று. பூங்கொடி நீச்சல்
பயிற்சி வகுப்பை புறக்கணிக்க சொன்ன மறு நொடி, ஓரமாய் இருந்த தண்ணீர் கூஜாவை கையில்
எடுத்தவள், அதை அப்படியே மகிழனின் தலை மீது கவிழ்திருந்தாள்.
அவளின் இந்த செய்கையை எதிர்பாராத மகிழன் மூச்செடுக்க, புரைக்கேரி தொடர்
இரும்பல்கள் தொண்டையை கமற வைத்தது. ஒரு வழியாய் இருமி முடித்தவன், கோபமாய் அவனைப்
பார்க்க, அவளோ அவனை விட உக்கிரமாய் அவனை உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.
அவனிடம் இப்படி யாரும் இதுவரை நடந்து கொண்டதே இல்லை. சரியாய் மூன்று
வருடங்களுக்கு முன்பு வரை அவன் நெருங்கிய நண்பர்கள் என்று உடனிருந்தவர்கள் கூட
அவனுக்கான மரியாதை இடைவெளி கொடுத்தே பழகுவார்கள். அவன் உலகின் நட்சத்திர அந்தஸ்து
அப்படியாய் இருந்தது.
வாழ்வில் ஒளி இழந்த தருணத்திலும், தனிமையில் தன்னை தகவமைத்துக் கொண்டானே தவிர
யாரிடத்திலும் தன் மரியாதை இடைவெளியை குறைத்துக் கொண்டதில்லை.
மகிழன் வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்து நின்ற தோரணையில், அவன் நிச்சயம்
தன்னை அடிக்கத் தான் போகிறான் என்று எண்ணிய பூங்கொடி பயத்தில் விழிகளை மூடினாள்.
கோபத்தில் எழுந்து ஒரு வேகத்தில் அவளை நெருங்கியவனோ அச்சத்தில் துடித்த அவள்
அதரங்களை கண்டதும், அடுத்த நொடி ஆழ மூச்செடுத்து தன் அடுத்த மூச்சை அவள்
இதழ்களுக்கிடை சுவாசித்தான்.
நிகழ்ந்தது இது தான் என் பூங்கொடியின் அகம் உணரும் முன், முதல் முத்தத்தில்
அவளின் புறம் உருக துவங்கியது.
எதிர்க்கவோ, ஏற்கவோ முடியாமல் தடுமாறி அவள் நிற்க, மகிழன் மிக மிக மென்மையாய்
அவளை தன் முத்த ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
நெடிய நொடிகள் பல கடந்த பின், அவளை விடுவித்தவன், “உனக்கு காலேஜ் கோச்சிங்
கிளாஸ் வேண்டாம். ஏன்னா நாளையில இருந்து உன்னோட கோச்... மிஸ்டர் யானி. யானி
மகிழன். புரிஞ்சதா..?’’ என்றுவிட்டு தன் அறை நோக்கி நடக்க, அவன் பெயரின் முன்
பகுதியை கேட்டவளுக்கோ சுனாமி தாக்கிய சிறு படகாய் பேரதிர்ச்சி.
அறை நோக்கி நடந்தவன் மனத்திரையில், “தண்ணியில முங்கி சாக வேண்டி வந்தாலும்
நிம்மதியா செத்துப் போவேன். ஆனா இனி ஒரு நாளும் ஸ்விம் பண்ண மாட்டேன். ஐ ஹேட் ஸ்விமிங்.
ஐ ஹேட் ஸ்விமிங்..’’ என்று கூச்சலிட்ட மகிழன் வந்து போனான்.
தலையை உலுக்கி நினைவை விரட்டியவன், நெடு நாட்களுக்கு பிறகு தன் அலமாரியை
திறந்து தன் பிரத்யேக நீச்சல் உடையை தேடி எடுத்தான்.
‘யானி 01’ என்று அதில் பொறித்திருந்த வாசகம், ‘உன்னை நான் விடுவேனா’ என்று
அவனை நோக்கி புன்னகைப்பதைப் போல இருந்தது.
மழை பொழியும்.
Super mam
ReplyDelete